மூன்று பேர் எமன் கடவுள் மீது செய்த சத்தியத்தை நிறைவேற்றப் பாடுபடுவதுதான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் கதை.
ஆந்திராவில் உள்ள ஒரு காட்டில் உள்ள சிறிய கிராமத்தின் பெயர் எமலிங்கபுரம். இந்தக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு திருடுவது தான் தொழில்; எமன் தான் கடவுள். கிராம மக்களுக்கு விஜி சந்திரசேகரும், அவர் மகன் விஜய் சேதுபதியும் தான் தலைவர்கள். அங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்குமே எமனிடம் குறிகேட்டுத்தான் செய்வார்கள்.
அப்படி எமனிடம் குறிகேட்டு, நாட்டுக்குள் திருடப் போகிறார்கள் விஜய் சேதுபதியும், அவருடைய நண்பர்கள் இருவரும். பெண்கள், குழந்தைகளை வதைக்காமல் நேர்மையாகத் திருடுவதுதான் அவர்கள் கொள்கை. அதன்படி நிறைய இடங்களில் திருடும்போது, ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள போட்டோவைப் பார்க்கிறார் விஜய் சேதுபதி.
ஹீரோயின் நிகாரிகா, அவர் பெற்றோருடன் இருக்கும் போட்டோ அது. அந்த போட்டோவைப் பார்த்ததும், நிகாரிகா தான் தன்னுடைய மனைவி என முடிவுசெய்து விடுகிறார். எனவே, அவரைக் கடத்திக் கொண்டு காட்டுக்குப் போக, தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்.
ஆனால், நிகாரிகாவோ கல்லூரியில் தன்னுடைய சீனியரான கெளதம் கார்த்திக்கை காதலிக்கிறார். கெளதம் கார்த்திக்கும் நிகாரிகாவைக் காதலிக்கிறார். இது தெரிந்தும், நிகாரிகாவைக் கடத்திக் கொண்டு காட்டுக்குப் போகிறார் விஜய் சேதுபதி. அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பதற்கான முடிச்சு, காட்டுக்குள் சென்ற பிறகு அவிழ்கிறது.
அந்த மர்ம முடிச்சு என்ன? நிகாரிகாவைத் தேடி கெளதம் கார்த்திக் காட்டுக்குள் போனாரா? அவர்கள் இருவரும் இணைந்தார்களா? விஜய் சேதுபதி என்ன ஆனார்? என்பது ஜாலியான திரைக்கதை.
எமன் கேரக்டரில் வழக்கம்போல் அசால்ட்டாக நடித்து அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி. தன்னுடைய 14 வருட தவ வாழ்க்கையை விவரிக்கும் இடத்தில் சிரிப்பு வரும் அதேநேரத்தில், அவர்மீது பரிதாபமும் வருகிறது. நாளுக்கு நாள் அவருடைய நடிப்பு மெருகேறிக்கொண்டே இருக்கிறது. ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனங்கள் வந்தாலும், சின்ன சின்ன பர்ஃபாமென்ஸ் மூலம் அசரடிக்கிறார்.
வெட்கம், மானம், சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத கேரக்டரில் கெளதம் கார்த்திக். கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கைக் குறைத்திருக்கலாம். நிகாரிகா, தமிழுக்கு நல்ல அறிமுகம். இன்னும் சில வருடங்களில் சிறந்த நடிகையாக மிளிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. விஜய் சேதுபதியை விரும்பும் கேரக்டரில் காயத்ரி. அதை வெளிப்படையாக சொல்லாமல், விஜய் சேதுபதியின் திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, கடைசியில் தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், ராஜ்குமார் மற்றும் கெளதம் கார்த்திக்கின் நண்பனாக வரும் டேனியல் மூவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காமெடி செய்திருக்கின்றனர். அதுவும் டேனியலின் காமெடிக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.
ஃபேண்டஸி கதையாக இருப்பதால், லாஜிக் பார்க்காமல் காமெடி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஆறுமுக குமார். அதுவே சில இடங்களில் போரடிக்கவும் செய்கிறது. என்னதான் காமெடி செய்தாலும், படத்தின் நீளம் சில இடங்களில் கொட்டாவி விட வைக்கிறது.
எப்போதும் மெலடி மட்டுமே தருகிற ஜஸ்டின் பிரபாகரன், இந்தமுறை வித்தியாசமான இசையின் மூலம் கவர்கிறார். ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவில் காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமையாய் இருக்கின்றன. பெயரைப் போலவே படமும் பெரிதாக இருப்பதுதான் மைனஸ்.
நல்ல நாளுக்காக காத்திருக்காமல், உடனடியாக தியேட்டருக்கு சென்று ரசிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.