Advertisment
Presenting Partner
Desktop GIF

சார்பட்டா: எமர்ஜென்ஸி பின்னணியில் மெட்ராஸ் பாக்ஸர் பரம்பரைகள்… திமுக கொண்டாட வேண்டிய படம்

உண்மையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை திமுககாரர்கள் கொண்டாட வேண்டிய படம். ஆனால், அவர்கள் இப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளதால் அப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

author-image
Balaji E
New Update
Sarpatta Parambarai, Sarpatta Parambarai movie, dirctor Pa Ranjith, Sarpatta Parambarai movie review, Arya, சார்பட்டா பரம்பரை, பா ரஞ்சித், மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை சினிமா விமர்சனம், ஆர்யா, பசுபதி, கலையரசன், Pa Ranjith, Tamil boxing films, Madras boxing culture, North Madras, Santhosh Narayanan, Pasupathy, Kalaiyarasan

Sarpatta Parambarai movie review: இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினி போன்ற நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்க வேண்டும் என்ற எந்த அழுத்தமும் சமரசமும் இல்லாமல் அவருடைய ஸ்டைலில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியுள்ளார்.

Advertisment

கபாலி, காலா என ரஜினிகாந்த்தை வைத்து அடுத்தடுத்து தொடர்ந்து 2 படங்களை இயக்கிய பா.ரஞ்சித், நார்த் மெட்ராஸில் 1970-களின் நடுப்பகுதியில் இருந்த பாக்ஸர்களின் பரம்பரைகளைப் பற்றியும் எமர்ஜென்ஸி பிண்ணணியில் அவர்களுடைய வாழ்கையை சார்பட்டா பரம்பரை என அழகாக படமாக்கியிருக்கிறார்.

நார்த் மெட்ராஸ் மக்கள் மத்தியில் ஒரு பாக்ஸிங் (ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை) கலாச்சாரம் இருந்தது. அவர்கள் பாக்ஸிங் மாஸ்டர்களின் அடிப்படையில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என பரம்பரைகளாக பிரிந்து பாக்ஸிங் களத்திலும் வெளியேயும் சண்டைபோட்டுக்கொள்கிறார்கள்.

சார்பட்டா பரம்பரை படத்தின் கதை 1975 எமர்ஜென்ஸி காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாக்ஸிங் பரம்பரைகளுக்கு இடையே நடந்த போட்டியில், வெற்றியை அவர்களுடைய பரம்பரையின் மானமாக நினைக்கிறார்கள். அப்படி, அதுவரை கோலோச்சி வந்த சார்பட்டா பரம்பரையை, வீழ்த்த இடியாப்ப பரம்பரையில் வேம்புலி என்ற பாக்ஸர் வருகிறான். சார்பட்டா பரம்பரையில் வந்த பாக்ஸிங் வாத்தியார் ரங்கன் (பசுபதி) தனது பரம்பரை மானத்தை தூக்கி நிறுத்த யாரை தனது பரம்பரை சார்பில் வேம்புலியுடன் களம் இறக்குவது என்று தேடிக்கொண்டிருக்கும்போது, ரங்கனை ஆதர்சமாக நினைக்கும் ஒரு ஹார்பர் தொழிலாளி கபிலன் (ஆர்யா) வருகிறான். பாக்ஸிங் மீது ஆர்வமாக இருக்கும் கபிலன் வேம்புலியை வீழ்த்தி சார்பட்டா பரம்பரை மானத்தை காப்பாத்துகிறானா இல்லையா என்பதுதான் கதை. இதற்குள், பாக்ஸிங் கலைஞர்களின், வாழ்க்கை அவர்களுடைய குடும்பம், அவர்களுடைய சமூக, அரசியல் பின்னணி, எமர்ஜென்ஸி கால கட்டத்தில் அவர்கள் என்ன சந்தித்தார்கள், பாக்ஸர்கள் எப்படி சரியான வழிகாட்டல் இல்லாமல் தவறான பாதைகளுக்கு செல்கிறார்கள். அவர்களில் கபிலன் எப்படி மீண்டு வந்து மீண்டும் பாக்ஸிங் களத்தில் இறங்குகிறான் என்று 70களில் இருந்த நார்த் மெட்ராஸ் மக்களின் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே வந்திருக்கிறார் பா.ரஞ்சித்.

சார்பட்டா பரம்பரையில் வந்த பாக்ஸிங் வாத்தியாராக வரும் ரங்கன் அப்பகுதியில் திமுகவைச் சேர்ந்தவராக இருக்கிறார். பாக்ஸிங் நுட்பங்களை அறிந்தவராக இருக்கிறார். திமுகவின் தெருமுனைக் கூட்டங்களில் ரங்கன் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து பேசுகிறார். சார்பட்டா பரம்பரை வாத்தியார் ரங்கனின் மாணவன் மீரானுக்கும் இடியாப்ப பரம்பரை வாத்தியார் துரைக்கண்ணு மாணவன் வேம்புலிக்கும் இடையே நடைபெறும் முதல் பாக்ஸிங் காட்சியிலேயே எப்படி பாக்ஸிங் பரம்பரைகள் இடையே அரசியல் உணர்வு கலந்திருந்தது என்பதைக் காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித். மீரான் திமுகவின் உதயசூரியன் ஆடை அணிந்து செல்கிறார். அதே போல, வேம்புலி காங்கிரஸ் கொடியின் கலர் கரை வைத்த ஆடை அணிந்திருக்கிறார்.

அதே போல சார்பட்டா பரம்பரை கபிலனுக்கும் இடியாப்ப பரம்பரை வேம்புலிக்கும் இடையே முதல் போட்டி நடந்துகொண்டிருக்கும்போதுதான் எமர்ஜென்ஸி நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கிறார்கள்.

பாக்ஸிங் வாத்தியார் எமர்ஜென்ஸியில் சிறையில் அடைக்கப்படுகிறார். சார்பட்டா பரம்பரையின் முக்கிய பாக்ஸரான கபிலனும், ரங்கன் வாத்தியார் மகன் வெற்றிச்செல்வனும் தவறான பாதைக்கு சென்று ரவுடிகளாகி மதுவுக்கு அடிமையாகிறார்கள். ரங்கன் திமுககாரர் என்றால், அவர் சிறை சென்றபோது, மகன் எம்ஜிஆர் (அதிமுக) ஆதரவாளனாக மாறுகிறான். சார்பட்டா பரம்பரை முதல் பாதி வரை விறுவிறுப்பாகவும் அதற்குப் பிறகு ஒரு சின்ன தொய்வுக்கு பிறகு மீண்டும் வேகமெடுத்து உச்சகட்ட விறுவிறுப்புடன் முடிகிறது. இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு காரணம், ரஞ்சித் பாக்ஸர்களின் வாழ்க்கை, சமூகம் எல்லாவற்றையும் காட்ட முயன்றதே காரணம். அவை காட்டப்படாமல் போயிருந்தால் படமும் முழுமை பெற்றிருக்காது.

கபிலனின் தந்தை முனிரத்தினமும் சார்பட்டா பரம்பரையில் முன்னணி பாக்ஸராக இருந்து ரவுடியானவர். கபிலன் சிறுவனாக இருக்கும்போது, அவன் கண் எதிரிலேயே அவனது தந்தையை வெட்டிக்கொலை செய்கிறார்கள்.

அதே போல, இந்த சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரைகள் சாதி சார்ந்தது இல்லை. ஆனால், பரம்பரைகளுக்கு இடையேயும் ஒரே பரம்பரைகளுக்குள்ளேயேயும் சாதி பாகுபாடு உணர்வு இருந்ததை காட்டியுள்ளார் பா.ரஞ்சித். சார்பட்டா பரம்பரையில் பாக்ஸராக இருக்கும் ராமன் அவனுடைய சித்தப்பா, 'மாடுசெத்தா சொல்லி அனுப்புகிறோம் வந்து எடுத்துக்கொண்டு போங்க' என்று சொல்லும்போது சாதி பிரச்னைகளையும் சொல்லி உள்ளார்.

சர்பட்டா பரம்பரையில் டேடி (ஜான் விஜய்) கதாபாத்திரம் மெட்ராஸ் பட்லர்களைப் பற்றியும் காட்டுகிறது. கபிலனின் மனைவி மாரியம்மா கதாபாத்திரம் 70களில் பெண்கள் எப்படி தைரியமாக இருந்தார்கள் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை வெறுமனே ஒரு பாக்ஸிங் பீரியட் படமாக மட்டும் எடுக்காமல், எமர்ஜென்ஸி காலகட்டம் என்பதன் மூலமாகவே அதற்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அதிலும், மெட்ராஸில் பாக்ஸிங்கில் புகழ்பெற்ற சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன் திமுககாரர் என்று தைரியமாக காட்டியிருக்கிறார். எமர்ஜென்ஸியில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையும் ஆட்சி கலைக்கப்பட்டதையும் படத்தில் காட்டுகிறார்.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எல்லோரும் உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த படம் பா.ரஞ்ஜித், நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கலை இயக்குனர் ராமலிங்கம் 70களில் இருந்த நார்த் மெட்ராஸை அப்படியே கண்முன்னே கொண்டுவந்துள்ளார். ஒளிப்பதிவில் முரளி நார்த் மெட்ராஸை ஓவியமாகியுள்ளார்.

கருணாநிதிக்கு திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் தவிர விரல்விட்டு எண்ணக்கூடிய சில படங்களில்தான் திராவிட கருத்துகளையும் திமுகவைப் பற்றியும் திரைப்படத்தில் காட்டப்பட்டன. ஏன், திமுக தலைவர் கருணாநிதி பேரன்கள் உதயநிதி, அருள்நிதிகூட தங்கள் படங்களில் திமுகவைப் பற்றி காட்ட, பேசவில்லை. ஆனால், பா.ரஞ்சித் எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸில் திமுகவினர் எப்படி செயல்பட்டார்கள் என்று எந்த பிரசாரமும் இல்லாமல் சர்பட்டா பரம்பரையில் துணிச்சலாக காட்டியுள்ளார். உண்மையில், எம்.ஜி.ஆர். சிவாஜி, கருணாநிதி, எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர் காலகட்டத்துடன் திராவிட அரசியல் பேசுகிற சினிமாக்களின் வரவு முடிந்து போய்விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த சூழலில் பா.ரஞ்சித், இந்த காலகட்டத்திலும் திராவிட அரசியல் சினிமாக்களை எடுக்கலாம் என்பதற்கான கதவை திறந்துவைத்துள்ளார். உண்மையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை திமுககாரர்கள் கொண்டாட வேண்டிய படம். ஆனால், அவர்கள் இப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளதால் அப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Madras Pa Ranjith Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment