‘பத்மாவத்’ : சினிமா விமர்சனம்

அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படும் ஒருவன், அவளை அடைய என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டான்? அவன் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்ததா? என்பதுதான் கதை.

அல்லா படைப்பில் அழகாக இருக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்க ஆசைப்படும் அலாவுதீன் கில்ஜி, இன்னொருவன் மனைவியும், பேரழகியுமான பத்மாவதியை அடைய ஆசைப்படுவதே ‘பத்மாவத்’ படத்தின் கதை.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவத்’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

முத்துக்கள் வாங்குவதற்காக இலங்கை செல்லும் சித்தூர் அரசனான ராகுல் ரத்தன் சிங், இலங்கையின் இளவரசி பத்மாவதியிடம் மனதைப் பறிகொடுக்கிறார். பத்மாவதிக்கும் ராகுலை பிடித்துப்போக, தந்தையின் சம்மதத்துடன் மணமுடித்து ராகுலோடு சித்தூர் செல்கிறார்.

இன்னொரு பக்கம், போரில் பல நாடுகளை வென்று அரசனின் நன்மதிப்பைப் பெறும் அலாவுதீன், ஒருகட்டத்தில் அரசனைக் கொன்று தானே கில்ஜியாகப் பட்டம் சூட்டிக் கொள்கிறார். ‘அல்லா படைப்பில் அழகானவை எல்லாமே தனக்குத்தான் சொந்தம்’ என்று நினைக்கும் அலாவுதீன் கில்ஜி, அவற்றை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

ராகுல் ரத்தன் சிங்கும், பத்மாவதியும் தனிமையில் இருக்கும்போது வேவு பார்க்கும் ராஜகுருவை, பத்மாவதியின் கட்டளையை ஏற்று நாடு கடத்துமாறு உத்தரவிடுகிறார் ராகுல் ரத்தன்சிங். அந்த ராஜகுரு செல்லும் இடம், அலாவுதீன் கில்ஜியின் அரண்மனை.

தன்னை நாடு கடத்தவைத்த பத்மாவதியைப் பழிவாங்குவதற்காக, ‘பத்மாவதியைப் போல் ஒரு பேரழகி இந்த உலகத்திலேயே கிடையாது. அவளை அடைந்தால் நீ இந்த உலகத்தையே அடையலாம்’ என தூபம் போடுகிறார் பிரமணனான ராஜகுரு. அதைக்கேட்டு பத்மாவதி மேல் பித்து பிடித்து அலையும் அலாவுதீன் கில்ஜி, அவரை அடைந்தாரா? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பத்மாவதியாக தீபிகா படுகோனே, ராகுல் ரத்தன் சிங்காக ஷாகித் கபூர், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜியின் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தெரிகிறார் தீபிகா படுகோனே. தன்னால் தன் நாட்டுக்கு கேடு வரும் என்ற சூழ்நிலையில் அவர் எடுக்கும் முடிவு பதைபதைக்க வைக்கிறது.

பேராசை பிடித்தவனாக, கண்களில் வெறியுடன் நடித்திருக்கிறார் ரன்வீர் சிங். பத்மாவதியைப் பார்க்க அவர் திட்டமிடும் ஒவ்வொரு விஷயமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்காக  போர் கூட அந்தக் காலத்தில் நடந்திருக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது.

காதலும், வீரமும் தன் இரு கண்களாகக் கொண்டு நடித்திருக்கிறார் ஷாகித் கபூர். தீபிகாவிடம் உருகுவதும், எதிரியிடம் கடைசிவரை தன்மானத்தை விட்டுக் கொடுக்காமலும் அற்புதமாக நடித்திருக்கிறார். ஆனால், அவர் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருப்பதாகத் தெரிகிறது.

13ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால், அந்தக்கால கோட்டைகள், ஆடை – ஆபரணங்கள் என எல்லாமே பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள். ஒரு நாவலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை,  பிரம்மாண்டத்துக்காகவே பார்த்து ரசிக்கலாம்.

‘பத்மாவத்’ படம், ராஜ்புத் வம்சத்து அரசியான பத்மினியைப் பற்றியது. இந்தப் படத்தில் ராணி பத்மினியைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி, கடந்த சில மாதங்களாகவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தீபிகாவின் தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால், கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், நாளை ரிலீஸாக இருக்கிறது.

ஆனாலும், படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என சில மாநில அரசுகளே இன்னும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. படத்தைத் தடைசெய்யுமாறு உச்சநீதிமன்றத்தையும் அவை நாடின. ஆனால், படத்துக்குத் தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இவர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்குப் படத்தில் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. சொல்லப்போனால், ராஜ்புத் வம்சத்தைப் பெருமைப்படுத்தி இருக்கிறது இந்தப் படம்.

×Close
×Close