இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, வருகிற மார்ச் 8ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
‘புதிய பாதை’ படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தவர் ரா.பார்த்திபன். அதன்பிறகு பல படங்களை இயக்கியுள்ள பார்த்திபன், ஏகப்பட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவருக்கும், நடிகை சீதாவுக்கும் கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு ரிலீஸான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கீர்த்தனா. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல், டைரக்ஷனில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தனா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் கீர்த்தனா, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.
கீர்த்தனாவுக்கும், தேசிய விருதுபெற்ற பிரபல எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அக்ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். இவர்களுடைய திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது.