”சினிமாவில் என்னைவிட என் சக ஆண் நண்பர்களுக்கு 3 மடங்கு சம்பளம் அதிகம்”: ராதிகா ஆப்தே

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும், நடிகைகளை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

கபாலி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் அதிக கவனம் செலுத்துவார். திரைத்துறையில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும், நடிகர்களை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும் இச்சமூகம், நடிகைகளை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே, “திரைத்துறையில் பல வேறுபாடுகள் நிலவுகின்றன. என்னுடைய சமகால நடிகர், நடிகைகளுடன் நண்பராக இருக்கிறேன். யாருக்கு என்ன சம்பளம் என்பது எனக்கு தெரியும். திரைத்துறையில் என்னை விட என் சக ஆண் நண்பர்கள் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்குகின்றனர். நமக்கு நிறைய ஆண் சூப்பர் ஸ்டார்கள் குறித்துதான் தெரியும். ஆனால், அந்த உயர்ந்த நிலைமையை அடைந்த நடிகைகள் மிக மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். இந்த துறை மட்டும் இதற்கு காரணம் அல்ல. இந்த சமூகமும் காரணம். தீபிகா, பிரியங்கா சோப்ரா நடிக்கும் படங்கள் கூட சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களின் பெயரால் தானே வழங்கப்படுகின்றன. இப்போதுதான் பெண் சூப்பர் ஸ்டார்கள் வரத்துவங்கியிருக்கிறார்கள். ஆனால், அதையே மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.”, என கூறினார்.

பார்வையாளர்கள் நடிகைகளை சூப்பர் ஸ்டார்களாக ஏற்றுக்கொள்ளும் போதுதான் இந்த நிலைமை மாறும் எனவும் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

“நான் சௌகரியமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் சினிமாவுக்காக அணிவது எல்லாம் என்னை இளவரசியாக உணர வைக்கிறது. என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நான் அவற்றை அணிந்ததில்லை. இது என் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மாற்றம்”, என ராதிகா ஆப்தே கூறினார்.

“ஒரு நடிகைக்கு இஸ்பிரேஷன் மிக முக்கியம். பயணம், மக்களை சந்திப்பது, எல்லாவற்றையும் கவனிப்பதன் மூலம் நான் அதனை பெறுகிறேன். பல வித்தியாசமான அனுபவங்களை பெறும்போது நான் உற்சாகமாக உணர்கிறேன். ஒரு இடைவெளி எடுப்பது எனக்கு முக்கியம்.”, எனக்கூறும் நடிகை ராதிகா ஆப்தே கபாலி திரைப்படத்திற்கு பின் திரையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close