Advertisment

பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள நிலையில், படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள நிலையில், படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisment

சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே அண்மை காலமாகவே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. சம்பள பிரச்னை தொடர்பாக பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில், படப்பிடிப்புகளை பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், பெப்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, சுமார் எட்டு ஆண்டுகளாக சம்பளப் பிரச்னை இருந்து வருகிறது. சம்பள விவகாரம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் போட வேண்டும். பொதுவிதிகளை புத்தகமாக அச்சிட வேண்டும். அப்போதுதான் படப்பிடிப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைக் கண்டறிந்து தீர்வு காண முடியும். இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நிலையாகவே நீடித்து வந்தது.

மதுரையில் நடந்த ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பு பயணப்படி சம்பள பிரச்சினை காரணமாக நின்று போனது. இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. நடந்த சம்பவத்துக்கு பெப்சி டெக்னீசியன் யூனியன் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சம்பள ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகாதது தான் இதுபோன்ற சிக்கல் களுக்கு காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டது. சமாதானமாக போவதற்கே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் அதனை பொருட்படுத்தாமல் செயல்படுகிறது. எனவே வேறு வழி இல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் கொடுக்க மறுப்பது நியாயம் இல்லை.

எனவே, ஏற்கனவே பேசி முடித்த சம்பளத்தை வழங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்களோடு வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். பொதுவிதிகள் கையெழுத்தாக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தார். பெப்சி தொழிலாளர்களின் போராட்டத்தால், சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கவலை அளிக்கிறது. நாங்கள் வழக்கம் போல் தயாரிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளோம். படப்பிடிப்புக்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டாம் என பெப்சி தொழிலாளர்களை கேட்டுக் கொள்கிறோம். தடங்கல் ஏற்படுத்தினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pepsi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment