‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் பிரச்னை தொடர்பாக, இயக்குநர் ஷங்கர் வடிவேலு மீது போலீஸில் புகார் கொடுக்க இருக்கிறார் என்கிறார்கள்.
வடிவேலு ஹீரோவாக நடித்து ரிலீஸான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தை, சிம்புதேவன் இயக்கியிருந்தார். மோனிகா, தேஜாஸ்ரீ இருவரும் ஹீரோயினாக நடித்தனர். நாசர், நாகேஷ், இளவரசு, ஸ்ரீமன், வெண்ணிறாடை மூர்த்தி, மனோரமா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
வரலாற்றுக் காமெடிப் படமான இதை, இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். எல்லாருக்கும் பிடித்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்தார் ஷங்கர். இந்த முறை ஷங்கரோடு லைகா நிறுவனமும் தயாரிப்பில் இணைந்து கொண்டது.
சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ உருவாகத் தொடங்கியது. வடிவேலுவுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டது. அவரும் ஓகே சொல்ல, சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மூன்று கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. ஆனால், வடிவேலு ஷூட்டிங் வரவில்லை. பேசிய சம்பளத்தைவிட வடிவேலு அதிக சம்பளம் கேட்க, அதைக் கொடுக்க தயாரிப்பாளர் தரப்பு தயாராக இல்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் விசாரணைக்கு வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.