அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர், இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமார், மதுரையைச் சேர்ந்தவர். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியும், இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசோக் குமார் எழுதியுள்ள கடிதத்தில், ‘சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை. அவர் வேற்று ஆட்களை வைத்து மிரட்டுகிறார். மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் குமார் எழுதியுள்ள முழு கடிதத்தையும் படிக்க:
இந்நிலையில், அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர்கள் சசிகுமார், அமீர், கரு.பழனியப்பன், சேரன், இரா.சரவணன் உள்ளிட்ட சினிமாத்துறையினர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகாரின் பேரில், அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்குத் தூண்டியதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த சசிகுமார், “என்னுடைய அத்தைப் பையன் அசோக் குமார். என்னுடைய நிழலாக இருந்தவன். என்னுடன் இணை தயாரிப்பாளரா இருந்தான். என்னுடைய படம் தொடர்பான பணிகளை அவன் தான் பார்த்தான். என்னுடைய படம் ரிலீஸாகிற சமயம் இது. ஆனால், ரெட் போட்டிருந்தார்கள். பணப் பிரச்னையால் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான். லெட்டர் எழுதி வச்சிருக்கான். அதுக்கு மேல என்னால் எதுவும் சொல்ல முடியாது” என பத்திரிகையாளர்களுக்கு வருத்தத்துடன் பேட்டியளித்தார்.
இயக்குநர் அமீர், “பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் டார்ச்சர் பண்ணதா லெட்டர் எழுதி வச்சிட்டு அசோக் குமார் செத்திருக்கான். நாங்கள் புகார் கொடுத்துவிட்டோம். அவர்மீது 306 பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 10 வருடங்களாக நடந்த கணக்கு – வழக்கு என்பதால், உடனடியாக முழுத் தகவல்களும் கிடைக்கவில்லை. ‘கொடிவீரன்’ 30ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டதை, ரெட் போட்டு மொத்தமா நிறுத்திட்டாங்க.
வட்டி குடுக்காம இல்ல, வட்டி கொடுத்துகிட்டுத்தான் இருந்திருக்கான். ஆனால், வட்டி மேல வட்டினு கந்துவட்டி போட்டா என்ன பண்றது? என்னைக் கேட்டா தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், ஃபெடரேஷனும் சேர்ந்து இதில் 302 பிரிவில் கொலை வழக்காகத்தான் போட வேண்டும். இது தொடர்ச்சியாக நடக்கிறது. திரைத்துறையினர் இனியும் நீங்கள் சரி செய்யவில்லை என்றால், இண்டஸ்ட்ரியை இழுத்து மூடிவிட்டு எங்காவது சென்றுவிடுங்கள்.
எவன் பாதிக்கப்பட்டவன் சொல்றான்? சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள். சொல்றதுக்கு யாருக்கு தைரியம் இருக்கிறது? ஒவ்வொரு முறையும் ரிலீஸை நிறுத்திவைத்தால், என்ன செய்வான் ஒருத்தன்? ரிலீஸ் பண்ணால்தானே காசு வரும்? பத்து வருஷமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்குறவன் திடீர்னு வந்து காசு குடுன்னா, எத்தனை கோடியை எப்படிக் கொடுக்க முடியும்? இங்க இண்டஸ்ட்ரி அப்படி இருக்கா என்ன? எதுக்கு இத்தனை சங்கங்கள் இருக்காங்க?
இதை உக்காந்து பேசணும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் எல்லாம் உக்காந்து பேசலைன்னா, நீங்க யாருமே சங்கத்துல நிர்வாகியா இருக்க தகுதியே கிடையாது” என காட்டத்துடன் கூறினார்.