பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக நடிகர் சங்கம் கண்டன அறிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் நடிகர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பல பெண்களை காதல் என்ற போலி அன்பு வலை வீசி, பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பல் சிக்கியுள்ளது. இந்த வழக்கில் அடுக்கடுக்காக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய குற்றவாளிகள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடி-யில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் இந்த கோர சம்பவத்திற்கும் கொடூரர்களுக்கும் எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : நடிகர் சங்கம் கண்டனம்

தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், தென்னிந்திய நடிகர்கள் சார்பாக ஒரு கண்டன அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

அதில், “200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஆசை வலையில் விழவைத்து ஆபாசமாக படமெடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள், எந்தவித பொறுப்பில் இருந்தாலும், எவ்வளவு பெரிய இடத்துப் பிள்ளைகளாயிருந்தாலும், அனைவருக்கும் உரிய தண்டனையை காவல்துறை நேர்மையாக நடவடிக்கை எடுத்து பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியால், அதில் கிடைக்கும் பல செயலிகள் மூலம், இளைஞர்களுக்கு பல ஆபத்துகள் நிகழ்வதை தடுக்க வேண்டும். வளரும் இளம் பருவத்தினர், தங்களது பெற்றவர்களுக்கு தெரியாமல், யாருடனும் நட்பு பாராட்டக்கூடாது என்றும், தெரியாதவர்களின் பழகுவதால், நேரும் விளைவுகள் மிகவும் மோசமாக மாறி வரும் சூழலில், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்” என்று சங்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close