பொங்கல் ரிலீஸ் போட்டியில் இருந்து விலகிய படங்கள்

வருகிற பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸாக இருந்த 5 படங்கள், தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளன.

வருகிற பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸாக இருந்த 5 படங்கள், தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளன.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, வருகிற 12ஆம் தேதி 8 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டன. சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, விமலின் ‘மன்னர் வகையறா’, சண்முக பாண்டியனின் ‘மதுர வீரன்’ ஆகிய படங்கள்தான் அவை.

இதில், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘குலேபகாவலி’ ஆகிய மூன்று படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைக்க, மற்ற படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் தேதியைக் குறிவைத்துள்ளன. விஷாலின் ‘இரும்புத்திரை’ ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.

அதே தேதியில் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’, அனுஷ்காவின் ‘பாகமதி’, விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. அத்துடன், சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ படமும் 26ஆம் தேதி ரிலீஸாகலாம் என்கிறார்கள். எனவே, குடியரசு தின விடுமுறை ரிலீஸும் மாற்றங்கள் வரலாம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். ‘கேங்’ என்ற பெயரில் இந்தப் படம் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் – தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம்.

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். ஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சன் டிவி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது.

×Close
×Close