நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்தது ஏன்?

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் பொன்வண்ணன்.

By: December 13, 2017, 12:32:23 PM

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் பொன்வண்ணன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த பொன்வண்ணன், தன்னுடைய பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  ‘நடிகர் சங்கத்தில் பதவி ஏற்கும்போது, பல கட்சியைச் சார்ந்தவர்கள் சங்கத்தில் இருப்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். ஆனால், விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காததால் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால், அதற்குப் பதில் அளிக்க விரும்பாமலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில், பொன்வண்ணனின் கருத்துக்கு மதிப்பளித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தன்னுடைய நிலைப்பாடு பற்றி விளக்கினார் விஷால். மேலும், நடிகர் சங்கத்துக்கு பொன்வண்ணனின் பணி அவசியம் என்பதால், ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் பொன்வண்ணன். அப்போது, “அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது. நடிகர் சங்கத்தைப் பயன்படுத்தி அரசியலுக்கு வரமாட்டோம் என ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். அதிமுகவில் உள்ளவர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜெயலலிதா கூறியிருந்தார். அரசியல் சார்பற்று நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது.

விஷால் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது. விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. விஷால் தேர்தலில் நிற்பது தனிமனித உரிமை. நடிகர் சங்கப் பதவியில் இருந்து விலகிவிட்டு விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது.

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். நடிகர் சங்க துணைத் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காகப் பதவிக்கு வந்தோமோ, அதை நிறைவேற்றப் பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ள பொன்வண்ணன், நடிகர் சங்கத்தை தயாரிப்பாளர்கள் விமர்சிப்பதைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Ponvannan continue his vp post in nadigar sangam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X