விஷாலுக்கு எதிர்ப்பு : நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா

விஷால் அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்து, நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

விஷால் அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்து, நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் விஷால். இந்நிலையில், வருகிற டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும் என்று சொல்லி, தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் இயக்குநர் சேரன். அவருக்கு ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், விஷாலின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படாததால், இரண்டாவது நாளின் முடிவில் உள்ளிருப்பு போராட்டத்தைக் கைவிட்டார் சேரன். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ஆனால், கூட்டத்தை நடத்தவிடாமல் சேரன் ஆதரவாளர்கள் பிரச்னை செய்ததால், கூட்டம் பாதியிலேயே நின்றது.

மேலும், தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல் ராஜாவும் ராஜினாமா செய்துள்ளார். விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதற்கு காரணமும் சொன்னார். இப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், நடிகர் சங்கத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் சங்க துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தன்னுடைய பதவியை திடீரென இன்று ராஜினாமா செய்துள்ளார். ‘நடிகர் சங்கத்தில் பதவி ஏற்கும்போது, பல கட்சியைச் சார்ந்தவர்கள் சங்கத்தில் இருப்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். ஆனால், விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காததால் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால், அதற்குப் பதில் அளிக்க விரும்பாமலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

பதவியில் இருந்து விலக வேண்டாம் என நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், தன்னுடைய முடிவில் பொன்வண்ணன் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத்குமார், ராதாரவி போன்றவர்கள் அரசியல் சார்புடன் இருந்ததால்தான் அவர்களை எதிர்த்து விஷாலைக் கொண்டு வந்ததாகவும், அவரும் அதேமாதிரி செயல்படுவது வருத்தம் அளிப்பதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க துணைத் தலைவரான கருணாஸ், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகர் சங்கப் பதவியில் இருந்து கொண்டுதான் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, கருணாஸ் நடிகர் சங்கப் பதவியில் இருந்து விலக வேண்டும் என அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பின்னர் அந்த எதிர்ப்பு அடங்கியது. இந்நிலையில், விஷாலை எதிர்த்து பொன்வண்ணன் பதவி விலகியிருப்பது, நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்தலாம் என கருதுகின்றனர். ஆனால், அப்படி நடைபெறாமல் பொன்வண்ணனை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ponvannan resigned his post in nadigar sangam

Next Story
“அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கவில்லை” – நிவின் பாலி மறுப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com