"சினிமாவில் நான் தவறவிட்ட வாய்ப்புகள்" - நடிகர் பிரஷாந்துடன் Ietamil-ன் சிறப்பு நேர்காணல்

வடிவேலு ஒரு legend. இன்னைக்கு உள்ள பசங்களுக்கு 'திருக்குறள்' மாதிரி ஆகிட்டாரு.

பிரஷாந்த்… 90-களின் தொடக்கத்தில் ‘வைகாசி பொறந்தாச்சு’ மூலம் சினிமா உலகத்தில் முதன் முதலாக பிறந்த காதல் நாயகன். அரும்பு மீசைகளுடன் ‘ஆணழகனாக’ வலம் வந்து, மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிக, ரசிகைகளின் இதயத்தை திருடி, ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ இன்றும் பலரது காதல் படத்தின் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒன்று. காதல், ஆக்ஷன், த்ரில், ஹாரர், பீரியட்ஸ் என்று பல வெரைட்டி சினிமாக்களை கொடுத்து ‘டாப் ஸ்டார்’ எனும் இமேஜைத் தாண்டி இன்றும் நல்ல நடிகனாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ஜானி. இதன்மூலம் சினிமாவில் தனது கம் பேக்கை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் பிரஷாந்திடம் ஒரு ஜாலியான நேர்காணல் அவர் பாணியிலேயே,

குமரேசனுக்கும், ஜானிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

குமரேசன்(வைகாசி பொறந்தாச்சு கேரக்டர் பெயர்) உள்ள வரும் போது ஒரு Youngster. சினிமான்னாலே என்னனு தெரியாம, அந்த மிகப்பெரிய கடலில் நீந்தி வந்தவன். கொஞ்சம் கொஞ்சமா நீந்தி கடல்-னா என்னனு தெரிஞ்சிகிட்டு, அதுல எவ்ளோ முத்துகள் இருக்கு, அதில் அடங்கியிருக்கும் ரகசியம் என்னென்ன… கடல் என்பது எல்லையே இல்லாத ஒரு விஷயம், அதன் ஆழத்தை யாரும் அறிந்ததில்லை. அப்பேற்பட்ட கடல்ல நானும் நீந்தி, வந்திருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாவும் இருக்கு.

பிரஷாந்த் அறிமுகமான சில காலங்களிலேயே வருடத்திற்கு ஆறு படங்கள் நடித்து மிக பிஸியாக இருந்தவர். அவ்ளோ பிஸியா இருந்தே போதே திருடா திருடாவிலும், கல்லூரி வாசலிலும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்ததன் காரணம் என்ன?

நான் கதைக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். என்னைப் பொறுத்தவரை டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பது பெரிய விஷயமல்ல. கதையும், என்னுடைய கதாபாத்திரமும் நல்லா இருந்தா போதும். அதுதான் எனக்கு முக்கியம். மக்களுக்கு புதுசா கொடுக்கணும் என்பது என்னோட விருப்பம்.

‘எங்க தம்பி’ படத்துல இருந்து ‘லண்டன்’ வரை மொத்தம் 7 படம் வடிவேலுவுடன் நடிச்சு இருக்கீங்க. எல்லாமே செம ஹிட். குறிப்பா, வின்னர் படம் வேற லெவல். வடிவேலு பற்றி என்ன சொல்ல நினைக்கிறீங்க?

முதல்ல அவர் ஒரு Dedicated artist. பல கஷ்டங்களை கடந்து வந்த மனிதர். அவர் இன்று இவ்வளவு பெரிய மனிதராக இருக்கிறார் என்றால், அதுக்கு காரணம் உழைப்பு, Hard work, Dedication.

‘ஆணழகன்’ படத்துல தான் வடிவேலுக்கு முக்கியமான ரோல் கொடுத்தோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது, எங்களுக்குள்ளயே ‘இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம்-னு’ பேசிக்குவோம். அதுதான் எங்களுடைய காம்போ ஹிட்டுக்கு முக்கிய காரணம்.

வடிவேலு ஒரு legend. இன்னைக்கு அவரோட ரசிகரா இல்லாம யாரும் இருக்க முடியாது. இன்னைக்கு உள்ள பசங்களுக்கு ‘திருக்குறள்’ மாதிரி ஆகிட்டாரு. இன்னைக்கு அவர் இல்லாம எந்த meme-ம் இல்ல.. நல்ல படங்களுக்காக வெயிட் பண்றாரு. அவ்ளோ தான்.

வடிவேலு மாதிரி, உங்களுக்கு சூப்பர் ஹிட் ஜோடி-ன்னா அது சிம்ரன் தான். அவங்க கூட நடிச்ச அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.

சிம்ரன் ஒரு Excellent ஆர்டிஸ்ட். ஒவ்வொரு படம் பண்ணும் போதும் We took Care Of Each Other. எங்களுக்குள்ள நல்ல Fun இருக்கும். அதே மாதிரி டான்ஸ்-ல எங்களுக்குள்ள செமையான போட்டி இருக்கும். நீ நல்லா ஆடுறியா? நான் நல்ல ஆடுறேனா-னு எங்களுக்குள்ள எப்போதும் போட்டி இருக்கும். டான்ஸ்-ல அவங்க ஏதும் மிஸ் பண்ணா, நான் கரெக்ஷன் சொல்லுவேன். அவங்க எனக்கு சொல்லுவாங்க . எங்களுக்குள்ள நல்ல give அண்ட் take policy இருந்துச்சு.

உங்க வாழ்க்கைல நீங்க தவறவிட்ட விஷயம்-னு ஏதாவது இருக்கா? சே… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே-னு வருத்தப்பட்டு இருக்கீங்களா?

வாழ்க்கைல தவறவிட்டது வந்து…… (ஒரு ஆழ்ந்த யோசனை)… (ஒரு பெருமூச்சுக்கு பின் ஆழ்ந்த அமைதி)

யோசிக்கவே டைம் இல்லாத ஒரு வாழ்க்கை இது. (ஒரு குறும் புன்னகை).. நான் எப்படின்னா. i will be honest. கேள்வி பதில் எப்போவுமே கொஞ்சம் honest-ட்டா இருந்தாதான் மக்கள் ரசிப்பாங்க. அது உண்மைனு தெரியும். ஏன்னா எல்லாருமே intelligentu. நாம வந்து இந்த கழுவுற மீன்ல நழுவுற மீன் மாதிரி பதில் சொன்னோம்னு வைங்க, அது தெரிஞ்சிரும். பதில் ஒழுங்கா இருக்கணும்.

தவற விட்டத விட சினிமா-ல நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்னு தான் சொல்லணும். இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. ஆனா, கத்துக்கணும்-னு ஆசை இருந்தும் அதுக்கான நேரம் இல்லாத போதுதான் எனக்கு வருத்தமா இருக்கும். அதை நினைத்து தான் நான் அடிக்கடி ஃபீல் பண்ணுவேன்.

‘பரவாலப்பா பின்றானே இந்த பையன்!’ அப்படி-னு நீங்க நினைக்கிற தற்கால நடிகர் யாராவது இருக்காங்களா?

ரெண்டு பேரு. ஒருத்தர் விஜய் சேதுபதி… இன்னொருத்தர் சிவ கார்த்திகேயன்… விஜய் சேதுபதி ரொம்பவே நல்லா பண்ணிட்டு இருக்காரு. கதைகளை கரெக்டா choose பண்ணிட்டு இருக்காரு. ஒரு வேரியேஷன் குடுக்கிறாரு.

சிவ கார்த்திகேயன் மக்களுக்கு ரொம்ப புடிச்சுப்போய் Neat-டா அடிக்கிறாரு. என்ன ரூட்ல போகணும்-னு தெரிஞ்சு கரெக்டா போயிட்டு இருக்காரு.

ரெண்டு பேருமே கஷ்டப்படறாங்க சார். ரெண்டு பேரும் ஹார்ட் ஒர்க்கர் சார். அது எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.

சினிமா வட்டத்துல இப்போ உங்களுக்கு ரொம்ப closeஆ இருக்குற ஹீரோ யாரு?

சினிமா-ல எப்போதும் என் close கேமரா தான் சார் (சிரிப்புடன்…)

சினிமால close-னா அப்பா தான் எப்போதுமே. அதாவது Life-ல எப்போவுமே ஒரு ஹீரோ ரோல் இருக்கும்ல. எனக்கு ஹீரோ எப்போதுமே என் அப்பாதான்.

பிரஷாந்த் நண்பனா இருக்குறதுக்கு என்ன தகுதி வேணும்? எதிரியா இருக்குறதுக்கு என்ன தகுதி வேணும்?

என்னோட நண்பனா இருக்கிறதுக்கு நல்ல மனிதனா இருக்கணும். என்னோட எதிரியா இருக்கிறதுக்கு தகுதியே தேவையில்ல. (பலத்த சிரிப்புக்கு பிறகு)… ஒன்னும் இல்ல சார்… அதாவது, எதிரி என்பது எனக்கு கிடையாது… சிம்பிள். ஏன்னா, ஒவ்வொருத்தரும் ஒரு காலக் கட்டத்துல ஒருமாதிரி ரியாக்ட் பண்ணுவாங்க.

நான் எப்போதுமே, சரி…. இதுவும் கடந்து போகும்-னு விட்டுடுவேன்…. அவங்க தவறா ரியாக்ட் பண்ணாலும் நான் கோச்சிக்க மாட்டேன். எப்படி இருந்தாலும் மனிதனே end of the day. எங்க இருந்தாலும் இங்கதான் திரும்பி வந்தாகனும். அப்போ திரும்பி வரப்ப மறுபடியும் அவர் என் நண்பர் ஆகிடுவாரு… ஸோ, எனக்கு எதிரியே கிடையாது.

‘ஜானி’ படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு நீங்க சொல்ல நினைக்குற விஷயம்?

இதுவரை பார்க்காத பிரஷாந்த்தை மக்கள் பார்ப்பாங்க. அதுல நான் பண்ணியிருக்கும் ரோல் மாதிரி நிறைய பேரு பண்ணிருக்காங்க. ஆனா, ஜானி-ல வர மாதிரி யாரும் பண்ணதில்ல. இது Usual ரோல் கிடையாது. இந்த ரோல் மற்ற நடிகர் நடிச்சிருக்காங்கன்னா yes. ஆனா, சம்திங் இப்படியும் இருக்கலாமே Oh My god அப்படிங்கிற ஃபீல் படம் பார்க்கும் போது வரும்.

Recent trendக்கும் Recent காலக் கட்டத்திற்கும் மக்கள் என்ன விரும்புறாங்களோ அந்தப் படம் தான் ஜானி. Interesting-கான விறுவிறுப்பான படமா இருக்கும். நிச்சயம் உங்கள் எல்லாருக்கும் புடிக்கும்.

ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் அதிக இடைவெளி எடுத்துகிறீங்க. ஜானிக்குப் பிறகு, பிரஷாந்த் கிட்ட அடிக்கடி படங்கள் எதிர்பார்க்கலாமா?

யா யா கண்டிப்பா… ஒரு ஒரு படத்திற்கும் ஒரு டைம் பிரேம் இருக்கு. அந்த டைம் பிரேம் முடிஞ்ச பிறகு அடுத்த படங்கள் பண்ணிட்டு இருந்தேன் . இப்போ வர காலக் கட்டத்துல இனிமே சீக்கிரம் படம் பண்ணி, அடுத்தடுத்து ரிலீஸ் பண்றதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கேன். கண்டிப்பா, இனி அடுத்தடுத்து நீங்க பிரஷாந்த் கிட்ட இருந்து படங்களைப் எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்குறது மட்டுமில்லாம, எப்போதும் போல, உங்க அன்பை எனக்கு தொடர்ந்து கொடுக்கணும். அந்த லவ் தான் எனக்கு முக்கியம். கொடுப்பீங்கள…..!?” என்று அதே டிரேட்மார்க் சிரிப்புடன்  முடித்தார் டாப்ஸ்டார்.

நாமும் All the Best Bro சொல்லி விடைபெற்றோம்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close