தணிக்கைச் சான்றிதழை வைத்து முன்னுரிமை : தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு நடைமுறை சாத்தியமா?

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும், அவர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும்படியான படத்தை வெளியிடுவது அவசியம் என சிலர் காலாவுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

பாபு

திரையுலக வேலைநிறுத்தம் வெற்றிகரமாக ஐம்பதாவது நாளை எட்டப் போகிறது. புதிய டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களைத் தவிர்த்துப் பார்த்தால், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழை வைத்தே படங்களை வெளியிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தீர்மானித்துள்ளனர்.

மார்ச் ஒன்று முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் எப்படி படங்களை வெளியிடுவது என்ற கேள்வி எழுந்த போது, தணிக்கைச் சான்றிதழை வைத்து முன்னுரிமை அளிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது முதலில் தணிக்கைச் சான்று பெற்ற படம் முதலில் வெளியாகும். தேதிவாரியாக இந்த பட்டியல் அமைக்கப்படும்.

இந்த ஏற்பாடு பிடித்துப் போகவே, இனி எப்போதும் இந்த முறையை கடைபிடித்தால் என்ன என்று அதனை ஒரு விதியாகவே சேர்த்திருக்கிறார்கள். அதாவது இனி தணிக்கைச் சான்றிதழை யார் முதலில் பெறுகிறார்களோ, அந்தப் படம் முதலில் வெளியாகும்.

கேட்பதற்கு சுகமாக இருந்தாலும், இது நடைமுறைக்கு சாத்தியமா என்பதை பார்க்க வேண்டும். அதற்குமுன், திரையுலகில் எழுந்துள்ள இன்னொரு கோரிக்கையும் முக்கியமானது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை. தமிழ் ரசிகர்கள் தமிழ் சினிமாவையும், திரையரங்குகளையும் மறக்க ஆரம்பித்துவிட்டனர். வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும், அவர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும்படியான படத்தை வெளியிடுவது அவசியம் என்கிறார்கள் ஒரு தரப்பினர். அதாவது காலா படத்தை முதலில் வெளியிடுங்கள், அப்போதுதான், ரசிகர்கள் திரளாக திரையரங்குக்கு வருவார்கள், ஒன்றரை மாதகால இடைவெளியை மறக்க வைக்க இதுவே சரியான வழி என்கிறார்கள். முன்னுரிமை அளிக்கிறோம் என்று சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட்டால், திரையரங்குகளுக்கு செல்வதை மறந்துவிட்ட ரசிகர்கள் திரையரங்குகளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின், தணிக்கைச் சான்றை வைத்தே முன்னுரிமை என்ற விதிக்கு ஆரம்பத்திலேயே எதிர்கருத்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய சவால் படம் எடுப்பதல்ல, வெளியிடுவது. படத்தை எடுத்து தணிக்கைச்சான்று பெற்ற பல டஜன் படங்கள் வாங்க ஆளில்லாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளன. அப்படி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படத்தை ஒருவர் திடீரென வாங்கினால், முன்னுரிமைப்படி அப்படத்துக்குதான் முதலில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும். அப்படி வெளியிடும் போது, ஏற்கனவே பட்டியலில் இருக்கும் படங்கள் பாதிக்கப்படாதாஎன்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பண்டிகை காலங்களை குறிவைத்தே வெளியிடப்படும். அப்போதுதான் அப்படங்களின் மெகா பட்ஜெட்டை திருப்பி எடுக்க முடியும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதியமுறைப்படி, முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை நாள்களை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உதாரணமாக சூர்யாவின் என்ஜிகே, அஜித்தின் விசுவாசம், விஜய் – முருகதாஸ் படம் ஆகியவை தீபாவளியை குறி வைத்துள்ளன. இந்தப் படங்களுக்கு முன்னால் தணிக்கைச்சான்று பெற்ற படங்கள் முன்னுரிமை அடிப்படையில் தீபாவளிக்கு வெளியானால், மேலே உள்ள படங்களின் தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?

பண்டிகை காலங்களில் மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிடுவது, மற்ற நாள்களை சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒதுக்குவது என்று தாணு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த போது ஒரு விதியை கொண்டு வந்தனர். அந்த நேரம் விஜய் படம் ஒன்று வெளியீட்டுக்கு தயாராக இருந்ததால் விதியை தளர்த்தி பண்டிகை இல்லாத நாளில் விஜய் படத்தை வெளியிட அனுமதித்தனர். அப்படி சில வாரங்களிலேயே அந்த விதி காற்றில் பறந்தது. அப்படியொரு நிலை இந்த புதிய விதிக்கு நேராது என்று சொல்வதற்கில்லை.

×Close
×Close