தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காலத்திலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். இவருக்காகவே ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி பார்க்க ஆரம்பித்தவர்கள் ஏராளம். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல், குடும்பத்துப் பெண்களிடம் பிரியாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
இப்படி எல்லோர் மனதிலும் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர், வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸான இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் பிரியாவின் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரசிகர் மன்றம் ஆரம்பித்த பெருமையும் பிரியாவுக்கு கிடைத்துள்ளது.
‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து, கார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ‘ஐ தமிழ்’க்கு கிடைத்த எக்ஸ்குளூஸிவ் விஷயங்கள் இவை.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல் அறிவிக்கப்படாவிட்டாலும், நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த விஷயங்கள் கசிந்துள்ளன. இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - இயக்குநர் கோகுல் இணைந்து படம் ‘ஜுங்கா’. வெளிநாட்டில் வசிக்கும் டானாக இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பாரீஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக சயிஷா நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்தியாவில் படமாக்கப்படும் காட்சிகள் அவர் இடம்பெறுகிறார்.
கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் ‘புகழேந்தி எனும் நான்’. இந்தப் படத்தில், அருள்நிதி ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால், விரைவில் கோலிவுட்டின் டாப் நாயகியாவார் பிரியா பவானி சங்கர் என்கிறார்கள்.