தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது, அந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் சிலரே பணம் கையாடல் புகார் தெரிவித்து, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டிருக்கும் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால், கடந்த ஆண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 'நம்ம அணி' எனும் பெயரில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று, 2017 ஏப்ரல் 6ம் தேதி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவியேற்றப் பின் பேசிய விஷால், "இது முக்கியமான தேர்தல். எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம் ஒரு தனி மனிதனுக்கானது அல்ல. ஒரு அணிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. அந்த அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களா? என்பதை செயல்களில்தான் காட்ட முடியும்" என்றார்.
ஆனால், சமீப காலமாக தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. விஷால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருவதே இல்லை என்றும், மற்ற முக்கிய நிர்வாகிகளான பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் ஆகியோரும் வருவது இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
நடிகர் சங்க தேர்தலின் போது விஷாலுக்கு ஆதரவாக இருந்த ஜே.கே.ரித்திஷ், இப்போது முற்றிலும் அவருக்கு எதிராக மல்லுக்கட்டி வருகிறார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரித்திஷ், விஷாலை சங்கத்தில் இருந்து வெளியேற்றாமல் ஓய மாட்டேன் என்ற ரீதியில் காட்டமாக பேசியிருந்தார்.
அலுவலகத்திற்கு வராதது மட்டுமின்றி, படங்கள் ரிலீஸ் தேதியில் ஒரு சாரார்க்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என்றும், தனியார் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் பல அதிருப்தி எதிர்ப்புக் குற்றச்சாட்டுகள் விஷால் மீது முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று தி.நகரில் உள்ள தயாரிப்பளர் சங்க அலுவலகம் முன்பு திரண்ட சில தயாரிப்பாளர்கள், பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டி, சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஏ.எல்.அழகப்பன், "விஷால் சங்கத்தில் இருந்த பணத்தை கையாடல் செய்திருப்பதாக தெரிகிறது. சங்க செயலாளரிடம் கணக்கு கேட்டால், 'எனக்கு தெரியாது' என்கிறார். எனவே, விஷால் மீது புகார் கொடுக்க உள்ளோம். சங்க கூட்டங்களுக்கு அவர் வருவதே இல்லை. ஊட்டியில் போய் படுத்துக் கொள்கிறார். நாங்கள் எங்கு போய் முறையிடுவது? எனவே சங்கத்தைப் பூட்டி, சாவியை முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஜே.கே.ரித்திஷ், "விஷால் மீதி பணம் கையாடல் புகார் கொடுப்பதற்காக தமிழக முதல்வரிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன், இன்று முதல்வரை சந்தித்து விஷால் மீது புகார் கொடுக்கப் போகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
இளமை, புதுமை, வேகம் என்று சங்கத்திற்குள் புயலாக வந்த விஷால் மீது இப்போது எதிர்ப்புப் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.