அன்னைக்கு ஓர் ஆலயம்... தனது தாய்க்கு கோவில் கட்டி அசத்திய நடிகர்

உலகத்திலேயே அன்னையை போற்றி நிறுவப்பட்டுள்ள முதல் கோவில்.

சர்வதேச அன்னையர் தினமான இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அன்னைக்கு நிறுவியுள்ள கோவிலை திறந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மா என்றால் அன்பு, அன்பு என்றால் அம்மா என்பதைபோல தன்னை பெற்று வளர்த்த தாய்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோவில் கட்டியுள்ளார்.

முன்னதாக ராகவா லாரன்ஸ் தனது அன்னை கண்மணி அம்மையாருக்கு கோவில் நிறுவப்படுவது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதில், இந்த கோவிலை திறக்கும் வகையில் 5 நாட்கள் தொடர் பூஜை நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள், கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தர வேண்டும். இந்த கோவில் என்பது எனது அன்னைக்கு மட்டும் அல்லாமல், உலகிலுள்ள அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம். எனவே, விழாவிற்கு வரும் போது தங்கள் தாயாரையும் அழைத்து வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் ராகவேந்திரர் பிருந்தாவனததில், கோவில் திறப்பு விழா நடைபெற்றது. கண்மணி அம்மையாரின் பளிங்கு சிலையுடன் காயத்ரி தேவி சிலை, சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்தவிழாவின் போது சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் இந்த கோவிலை திறந்துவைத்தார். ராகவா லாரன்ஸ், அவரது தாயார் கண்மணி, மனைவி லதா, மகள் ராகவி, சகோதரர்ககள் எல்வின், முரளி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் சாய் ரமணி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ராகவா லாரன்ஸுன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடவுளின் கருணையாலும், உங்களின் பிராத்தனையாலும், எனது அன்னையின் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. உலகத்திலேயே அன்னைக்கு நிறுவப்பட்டுள்ள முதல் கோவில் என்ற சிறப்புடன், உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன். எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close