‘கதாநாயகனாக முதன்முதலில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக இரண்டு மடங்கு சம்பளம் கேட்டேன்’ என ஃப்ளாக்பேக்கை ஓப்பன் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், இன்று காலை முதல் தன்னுடைய ரசிகர்களை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். இன்று தொடங்கியுள்ள இந்த சந்திப்பு, வருகிற 31ஆம் தேதி வரை தொடர்கிறது. இன்றைய நிகழ்வில், இயக்குநர்கள் கலைஞானம் மற்றும் மகேந்திரன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், “சினிமாவில் நான் ஹீரோவாக அறிமுகமாகவில்லை. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தேன். அதுவும் பல படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் கலைஞானம் சார் என்னைச் சந்தித்து, தன் படத்தில் நடிக்குமாறு கேட்டார்.
வில்லனாகத்தான் நடிக்கக் கேட்கிறார் என்று எண்ணிய நான், அப்போது பிஸியாக இருந்ததால் மறுத்துவிட்டேன். ஆனால், அவர் என்னை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கப் போவதாகச் சொன்னதும் எனக்குப் பயங்கர அதிர்ச்சி. அவரைப் பற்றி அப்போது எனக்கு அதிகம் தெரியாது என்பதால், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்.
மறுபடியும் சில நாட்கள் கழித்து கலைஞானம் சார் என்னை அப்ரோச் செய்தார். எனக்கோ அவரை மறுக்க வேண்டிய சூழல். அப்போது ஒரு படத்துக்கு நான் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். அவரைத் தவிர்ப்பதற்காக சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி, ‘50 ஆயிரம் சம்பளம் தந்தால் நடிக்கிறேன்’ என்று சொன்னேன்.
சில நாட்கள் கழித்து திரும்பி வந்தவர், என் கையில் 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, ‘அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அத்துடன், ‘ஸ்ரீகாந்த் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார்’ என்றார். ஸ்ரீகாந்த் அப்போது மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட். மேலும், ஸ்ரீபிரியா தான் ஹீரோயின் என்றார். அதற்கு மேல் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டேன்” என ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் செய்தார்.
ரஜினி இப்படி இரண்டு மடங்கு சம்பளம் கேட்டு தவிர்க்க நினைத்த படம் ‘பைரவி’. 1978ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. ரஜினி மட்டும் அன்று ஹீரோவாக நடிக்க சம்மதிக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ஆயிருப்பாரா என்பது சந்தேகம்தான்.