ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கப் போவதாகவும், அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ரஜினி நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னரே, பா.இரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ரஜினி. ஆனாலும், இதுவரை ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை.
‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இழுத்துக்கொண்டே போவதால், முதலில் ‘காலா’வை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ‘காலா’ படம் ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு கிராபிக்ஸ் பணிகள் முடிவதை முன்னிட்டு ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், அரசியலில் இறங்குவது உறுதி என கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார் ரஜினி. எனவே, ரஜினி மக்கள் மன்றத்துக்கான ஆள் சேர்ப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அது முடிந்த பின்னரே கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவிப்பார் ரஜினி என்கிறார்கள். தற்போது ஏரியா வாரியாக மன்றப் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
.@SunTV is happy to announce #Superstar’s next colossal production with @SunPictures.#SuperstarwithSunPictures @superstarrajini @karthiksubbaraj pic.twitter.com/wD5uPCWT0Z
— Sun TV (@SunTV) 23 February 2018
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ மற்றும் ‘மெர்குரி’ ஆகிய படங்களை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு அரசியல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் ஆசை. இந்த ஆசை ரஜினியின் காதுக்கும் சென்றிருக்கிறது. எனவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கப் போகும் படம் அரசியல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.