சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... இந்த வார்த்தையை கேட்கும்போதே ஒருவித மயக்கமும், ஈர்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது.. இதுதான் இம்மனிதனின் வெற்றி ரகசியம். அந்த ரகசியத்தை அவர் எழுதவில்லை. அவர் இருப்பதாய் நம்பும் கடவுள் எழுதியிருக்கலாம். அல்லது 'இருந்தா நல்லா இருக்கும்-னு' சொல்ற கமல்ஹாசனின் கூற்றுப்படி பகுத்தறிவாளிகளுக்கே புரியாத புதிராக இருக்கலாம்.
சினிமா எனும் மாயக் கண்ணாடியில் பல மாய வித்தைகளை செய்து 'உச்ச நட்சத்திரம்' எனும் அந்தஸ்துக்கு உயர்ந்திருப்பவர் ரஜினி. ஆந்திராவில் என்.டி.ராமாராவை அந்த மாநில மக்கள், தங்கள் வீட்டில் அவரது படத்தை வைத்து தெய்வமாகவே வழிபடுவார்கள். இவ்வளவு ஏன், இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கண்ணா தொடர்ந்து சோலோவாக 15 ஹிட் படங்களை கொடுத்தவர். இந்திய சினிமாவில் இன்றளவும், இது வேறு எந்த ஹீரோவாலும் முறியடிக்கப்பட முடியாத சாதனையாக உள்ளது. இவர்களிடம் இல்லாத காந்த சக்தியா ரஜினியிடம் உள்ளது? என்று கேட்டால், ஆம்! என்று தான் பதில் சொல்ல முடியும்.
பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!
அது எப்படி, இவர்களை விட ரஜினி அதிக மக்கள் ஈர்ப்பு கொண்டவரானார்? என்று நீங்கள் கேட்டால், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் நடக்கும் 70 வயதான முதியவர் ஒருவரை வைத்து இன்றும் 'சும்மா கிழி' என்று மாஸ் ஓப்பனிங் சாங் எடுக்கிறார்கள் என்றால், இதைவிட வேறு என்ன பதிலை நாம் சொல்ல முடியும்...!
அதுதான் ரஜினி...!
பாபா படத்தில் 'எல்லாம் மாயா' என்று ரஜினி பாடுவாரே, அதுபோல் இதுவும் மாயா தான். யாருக்கும் பிடிபடாத மாயா. ஏன்.. ரஜினிக்கே புரியாத மாயா இது.
ரஜினியின் கண்கள், சிரிப்பு, பேச்சு, நடை, தலைமுடி, உயரம், எடை என சகலமும் அவரை ரசிக்க வைக்கிறது. இதனை அனைத்து ஹீரோவிடமும் நாம் ரசிக்க முடியும் தானே. அஜித்திடம் இல்லாத மேனரிசமா? அல்லது விஜய்யிடம் இல்லாத பாடி லேங்குவேஜா? ஆனா பாருங்க, ரஜினி எனும் துப்பாக்கியால் உந்தப்பட்டு பாய்ந்த இரு தோட்டாக்கள் தான் அஜித்தும், விஜய்யும். இன்னும் அவர்களால் இந்த 70 வயது முதியவரின் அந்த உச்சக்கட்ட அந்தஸ்தை எட்டமுடியவில்லை.
ரஜினியை பொறுத்தவரை அழகு என்பது, தோற்றக் கவர்ச்சி அல்ல. அதை 'கடவுளின் கவர்ச்சி' என்று கூறலாம். கடவுளை நாம் நேசிப்பதற்கு என்ன காரணம் கூறமுடியும்? அதற்கு பதிலே நம்மிடம் கிடையாது. அந்த பதில் காற்றைப் போல.. அதை பிடிக்கவும் முடியாது, தேடவும் முடியாது. அதுபோலத் தான் ரஜினியின் மக்கள் கவர்ச்சியும். இங்கே யார் வேண்டுமானாலும் ஸ்டைல் பண்ண முடியும். ஆனால், அந்த ஸ்டைலை ஸ்டைலாக செய்ய ரஜினியால் மட்டுமே முடியும்.... அவருக்கு தான் அது வரும். இதன் மூலம், கடவுள் இருக்கிறார் என்று கூட நம்பலாம்.
தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்தே தீரும். ரஜினி என்கிற கவர்ச்சி பிம்பம் அபூர்வ ராகங்களில் தொடங்கி தர்பார் வரை இன்னும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இருப்பது ஆச்சர்யம். ஆச்சர்யம் என்பதைவிட அதிசயம், அற்புதம் என்று சொல்லலாம்.
உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரால் மட்டுமே இது சாத்தியமாகியது. அவர்களில் ரஜினியும் ஒருவர் என்பது நடிகராக இந்தியா பெற்ற பொக்கிஷம்.
ஆனால், என்னதான் இயற்கை அவருக்கென்று தனியாக வரங்கள் கொடுத்திருந்தாலும், வளரும் போதே ரஜினிகாந்த் பின்பற்றிய குணாதிசயங்கள் தான் அவரை ஒரு நல்ல தலைவராக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறது.
மக்கள் நேசிக்கும் ஒரு தலைவனாக இருக்க அவனுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?
நம்பிக்கை.... அதானே எல்லாம்!
நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர மக்களுக்கு வேறு என்ன வேண்டும்? இவன் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை. இவன் நம்மை ஏமாற்ற மாட்டான் என்ற நம்பிக்கை. முக்கியமாக, துரோகம் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை.
அந்த நம்பிக்கை இந்த நொடி வரை ரஜினி மீது தெரிந்தோ, தெரியாமலோ மிக அதிகமாகவே இருக்கிறது. அரசியல் தலைவர் என்ற கோணத்தில் இதைச் சொல்லவில்லை. ஒரு நல்ல மனிதன் என்ற அடைப்படையில் சொல்கிறேன்.
அந்த நல்ல மனிதன் இன்னும் அரசியல் எனும் ரயிலில் முழுமையாக ஏறவில்லை. ஸ்டேஷன் வரை வந்துவிட்டார். ஆனால், இன்னும் கம்பார்ட்மென்ட் வராமல் வெளியேயே அமர்ந்திருக்கிறார். 'அதான் ஸ்டேஷன் வந்தாச்சே, உள்ளே வர வேண்டியது தானே' என்று இந்த உலகம் பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் வாயிலாக எவ்வளவோ கலாய்த்தும், கோபமாகவும், விரக்தியுடனும் கேட்டுப் பார்த்துவிட்டது.
ம்ஹூம்... என்பதே அவரது ரிப்ளை.
"ஸ்டேஷன் வந்துட்டேன்... ரயில் வரும் போது உள்ளே வருகிறேன். ரயிலே வரவில்லை அதற்குள் என்னை ரயில் ஏறச் சொன்னால் எப்படி?" என்பது ரஜினி வைக்கும் வாதம்.
ரயில் ஏறுவது இருக்கட்டும், முதல்ல டிக்கெட் எடுத்தீங்களா? என்று மற்றொரு கேள்வி பாய, 'எனக்கு தலை சுத்துது' கொஞ்சம் சும்மா இருங்கப்பா... எனும் ரஜினி, அந்த ரயிலுக்காக இப்போதும் காத்திருக்கிறார்.
ஒருநாள் அந்த ரயில் வரும்... டிக்கெட்டுடன் அவரும் ஏறுவார்... ஆனால், முழுமையாக அவர் சென்று சேர வேண்டிய இடத்தில் இறங்குவாரா அல்லது அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்குவாரா என்பது அவர் மேலே கைக்காட்டும் ஆண்டவன் கட்டளையில் தான் உள்ளது.
ஆனால் ஒன்று... வரப் போகும் ரயில் காவி நிறத்திலும் இருக்கப் போவதில்லை, கருப்பு நிறத்திலும் இருக்கப் போவதில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.