scorecardresearch

இமயமலையில் பாபாஜி தியான மண்டபம் கட்டிய ரஜினிகாந்த்

பாபாவைத் தரிசிப்பதற்காக இமயமலை வரும் பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதியாக ரஜினியும், அவருடைய நண்பர்களும் இணைந்து ஒரு தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர்.

இமயமலையில் பாபாஜி தியான மண்டபம் கட்டிய ரஜினிகாந்த்

பாபா மீது அளவில்லாத பக்தி கொண்டவர் ரஜினி என்பது உலகறிந்த விஷயம். பாபாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலோ, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ… இமயமலையில் இருக்கும் பாபாவைப் பார்க்கக் கிளம்பிவிடுவார் ரஜினி. அவருடன் ஒன்றிரண்டு நண்பர்கள் உடன் செல்வார்கள்.

ரஜினி இமயமலையில் இருக்கும் சமயங்களில், செல்போன் கூட பயன்படுத்த மாட்டார். யாரும் அவரைத் தொடர்புகொள்ள முடியாது. அவராகவே வீட்டுக்குப் போன் செய்தால்தான், அவரிடம் வீட்டில் உள்ளவர்கள் கூட பேச முடியும்.

இமயமலைக்குச் சென்று பாபாவைத் தரிசித்துவிட்டு வந்தால் போதும்… கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதுபோல் ஃப்ரெஷ்ஷாகி விடுவார் ரஜினி. அவரின் இன்ப, துன்பங்களில் எப்போதுமே பாபாதான் துணையிருப்பதாக ரஜினி நம்புகிறார். எனவேதான், ‘பாபா’ என்று படமே எடுத்தார்.

ரஜினியைப் பின்பற்றி, திரையுலகில் இப்போது பெரும்பாலானவர்கள் பாபா பக்தர்களாக மாறிவிட்டனர். அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர், அஜித். அஜித் படங்களின் பூஜை, பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில்தான் போடப்படும். ஈசிஆரில் உள்ள பாபா கோயிலில்தான் பட பூஜை போடப்படுவது வழக்கம். அதுமட்டுமல்ல, யாரும் இல்லாத அதிகாலை வேளைகளில் அங்குவந்து தரிசித்துவிட்டுச் செல்வார் அஜித். இன்னொருவர், நடிகை தன்ஷிகா. சாய் பாபா மீதுள்ள பக்தியால் தன்னுடைய பெயரை சாய் தன்ஷிகா என்றே மாற்றிக் கொண்டுள்ளார்.

rajinikanth

இந்நிலையில், பாபாவைத் தரிசிப்பதற்காக இமயமலை வரும் பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதியாக ரஜினியும், அவருடைய நண்பர்களும் இணைந்து ஒரு தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர். ‘ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தியான மண்டபத்தின் கிரக பிரவேசம், அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், ரஜினி கலந்து கொள்வார் என்று ரஜினியுடன் இமயமலைக்குச் செல்லும் நண்பரான விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth builded dhyana mandapam at himalaya

Best of Express