இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி, அக்ஷய் குமார் எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவான 2.0 படம், சீனாவில் வசூல்ரீதியாக தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. பாலிவுட்டில் வெளியான பஜ்ரங்கி பைஜான். டங்கல், அந்தாதுண், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், இங்கிலீஷ் மீடியம் உள்ளிட்ட படங்கள் வசூல்புரட்சியையே ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து, இந்திய படங்கள், தொடர்ச்சியாக சீன மக்களை ஆக்கிரமிக்க துவங்கின. இதில் சில படங்கள் வெற்றியும் பெற்றன என்பதை மறுக்க இயலாது.
இந்தியாவில் அதிக பொருட்செலவில் (ரூ.570கோடி) தயாரான 2.0 படம், சீனாவில், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படம், செப்டம்பர் 6ம் தேதி சீனாவில் வெளியானது. படம் வெளியான முதல்வாரத்தில் ரூ.22 கோடி அளவிற்கு மட்டுமே வசூல் செய்துள்ளது. இது வசூல்ரீதியாக தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல், ராஜமெளலி இயக்கத்திலான பாகுபலி 2 படம், 2018ம் ஆண்டு மே மாதம் வெளியானது. இந்த படம், தற்போது வரை ரூ.52 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. படம் வெளியிடப்பட்ட பல தியேட்டர்கள் ஈயாடின என்று சொன்னால் அது மிகையல்ல.
2.0 மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு இந்தியாவைப்போல, சீனாவிலும் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சீன மக்களின் எதிர்பார்ப்பை அந்த படங்கள் பூர்த்தி செய்ய தவறினதாலேயே, இந்த அளவிற்கு படுதோல்வியடைந்துள்ளதாக திரைத்துறை வல்லுனர் கிரிஷ் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் குடும்ப பாங்கான மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படங்களையே விரும்பி பார்த்து வருகின்றனர். காஸ்டியூம் டிசைனிங், விசுவல் எபெக்ட்ஸ் படங்களை அவர்கள் வெறுக்க துவங்கியுள்ளதை, 2.0 மற்றும் பாகுபலி 2 படங்களின் தோல்வி எடுத்துரைப்பதாக சினிமா பங்கு வர்த்தகர் அமோத் மெஷ்ரா குறிப்பிட்டுள்ளார்.