பீட்டா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கிடா வெட்டுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள்.
கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, வேலூர் உள்ளிட்ட 17 மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
மதுரை, சேலம் மாவட்ட ரசிகர்களை சந்தித்தபோது, “உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து சமைத்துப் போட வேண்டும் என்று ஆசை. ஆனால், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சைவத்துக்கு மட்டுமே அனுமதி என்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
தலைவரால் முடியாவிட்டால் என்ன... தலைவரின் ஆசையை நாமே நிறைவேற்றுவோம் என்று நினைத்த மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள், அழகர்கோவிலில் நாளை 100 கெடாக்களை வெட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கப் போவதாக அறிவித்தனர்.
இதைக் கேள்விப்பட்ட பீட்டா அமைப்பினர், ‘உங்கள் பெயரைச் சொல்லி விலங்களைக் கொல்வது பாவம். அதை தடுத்து நிறுத்துங்கள்’ என ட்விட்டரில் பதிவிட்டு ரஜினிக்கு டேக் செய்தனர். ஆனால், மலேசியாவில் இன்று நடைபெற இருக்கும் நட்சத்திரக் கலைவிழாவிற்காக சென்றுள்ள ரஜினி, இதைப்பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.
ஆனால், பீட்டா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். 100 கிடாக்களை வெட்டுவதற்குப் பதிலாக, கடைகளில் இருந்து இறைச்சி வாங்கி ரசிகர்களுக்கு கறி விருந்து அளிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் தடைவாங்கியதால், கடந்த வருடம் பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தியதோடு மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்தப் போராட்டம்.
பீட்டாவுக்கு எதிராக இவ்வளவு பெரிய போராட்டம் நடந்த இந்த தமிழகத்தில், அவர்களின் ஒரேயொரு கருத்துக்குப் பயந்து ரஜினி ரசிகர்கள் தங்கள் முடிவை மாற்றியிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீரத்துக்குப் பெயர்போன மதுரையில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் மற்றவர்கள்.
ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருக்கும் இந்த நேரத்தில், மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்களின் இந்த பின்வாங்கல் முடிவு, ரஜினியின் அரசியல் பயணத்தில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும். பீட்டாவுக்கே பயந்து தங்கள் முடிவை மாற்றிக் கொள்பவர்கள், நாளை அரசியலுக்கு வந்தபிறகு எதற்கெல்லாம் பயப்படுவார்களோ என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.