“நடிகனாகவே எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது” – ரஜினிகாந்த்

‘நடிகனாகவே எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது’ என மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

By: Updated: January 8, 2018, 12:42:31 PM

‘நடிகனாகவே எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது’ என மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஒரே ஹெலிகாப்டரில் விழா நடந்த மைதானத்துக்குள் வந்து இறங்கினர். விழா மேடைக்கு ரஜினியை அழைத்துச் சென்ற தொகுப்பாளர்கள், அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.

கேள்வி : உங்களுக்கு முதல் காதல் அனுபவம் இருக்கிறதா? இளம்வயதில் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா?

ரஜினிகாந்த் : ஆமாம், நான் காதலித்து இருக்கிறேன். கர்நாடகாவில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு காதல் வந்திருக்கிறது. அது மறக்க முடியாத காதல். முதல் காதல் எல்லோருடைய மனதிலும் இருக்கும். அந்தக் காதலில் நிறைய பேர் வெற்றி அடைந்திருக்கிறார்கள்; நிறைய பேர் தோல்வி அடைந்திருக்கிறார்கள். என்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்தது.

கேள்வி : ‘பைரவி’ முதல் ‘எந்திரன்’ வரை உங்கள் சினிமா பயணம் எப்படி இருந்தது?

ரஜினிகாந்த் : எனது 42 ஆண்டுகால சினிமா பயணத்தில், முடிந்த அளவுக்கு மக்களை மகிழவைத்து இருக்கிறேன். அதேபோல் முடிந்த அளவுக்கு நல்ல கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி : ‘ரஜினி ஸ்டைல்’ என்பது உங்களிடம் இயற்கையாகவே இருந்ததா? அல்லது இயக்குநர் பாலசந்தரால் தூண்டிவிடப்பட்டதா?

ரஜினிகாந்த் : நான் இயற்கையாக எப்படி இருக்கிறேனோ, அப்படித்தான் எப்போதும் இருக்கிறேன். கர்நாடகாவில் கண்டக்டராகப் பணியாற்றியபோது கூட, வேறு பஸ்களின் கண்டக்டர்கள் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். நான் 10 நிமிடத்தில் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்.

கர்நாடக பஸ்களில் பெண்கள் முன்புறமும், ஆண்கள் பின்புறமும் உட்கார்ந்திருப்பார்கள். நான் ஆண்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு முன்னால்தான் போய் நிற்பேன் (சிரிக்கிறார்). அப்போது எனது தலையில் நிறைய முடி இருக்கும். அது காற்றில் பறக்கும். அடுத்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் ஏறும்போது, ஸ்டைலாக அந்த முடியைக் கோதிவிட்டபடி ‘டிக்கெட் டிக்கெட்’ என்று கேட்டுக்கொண்டே செல்வேன்.

சினிமாவுக்கு வந்ததும் என்னுடைய தோற்றத்தையும், வேகத்தையும் பாலச்சந்தர் பார்த்துவிட்டு, ‘டேய்… சினிமா துறையில் உனது தோற்றத்தை மாற்றச் சொல்வார்கள். நீ மாற்ற வேண்டாம். இதுதான் புதுசு. எல்லோருக்கும் பிடிக்கும், நீ இப்படியே இரு’ என்றார்.

கேள்வி : உங்களுடைய குறைந்தபட்ச, அதிகபட்ச ஆசைகள் என்ன?

ரஜினிகாந்த் : எனக்கு ஒரு ஸ்கூட்டர், ஒரு படுக்கை அறை கொண்ட வீடு என்று நடுத்தர வாழ்க்கையாக வாழ்வது குறைந்தபட்ச ஆசையாக இருந்தது. நாட்டு மக்களை, என்னை வாழவைத்த தமிழக மக்களை நிறைய நன்றாக வாழவைக்க வேண்டும் என்பது என்னுடைய அதிகபட்ச ஆசையாக இருக்கிறது.

கேள்வி : நீங்கள் சந்தோஷமாக இருப்பது எப்போது? வருத்தப்படுவது எப்போது?

ரஜினிகாந்த் : நான் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடினால் சந்தோஷப்படுவேன். தோல்வி அடைந்தால் வருத்தப்படுவேன். நான் கண்ணீர் விட்டு அழுத சம்பவங்களும் எனது வாழ்க்கையில் நடந்து இருக்கின்றன.

கேள்வி : பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு குடும்பம் சுகமா? சுமையா?

ரஜினிகாந்த் : அதுபற்றி பொதுவாகச் சொல்லிவிட முடியாது. தனித்தனி நபர்களையும், தனித்தனி குடும்பத்தையும் பொறுத்தது அது.

கேள்வி : ஜோசியத்தைப் பார்த்துவிட்டு சும்மா இருக்க வேண்டுமா? உழைக்க வேண்டுமா?

ரஜினிகாந்த் : ஜோசியத்தில் புராதன காலத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாஸ்திரம் இருக்கிறது. ஜோசியத்தை யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அதற்காக ஜோசியத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. என்ன நடக்குமோ, அது நடக்கும். என்ன கிடைக்காதோ, அது கிடைக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. அதைப் புரிந்துகொண்டு ஆண்டவன் நமக்குக் கொடுத்த தொழிலை நாணயமாகவும், நேர்மையாகவும் செய்துகொண்டு இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

கேள்வி : 1996இல் உங்களுக்கு வந்த ஒரு வாய்ப்பைத் தவறவிட்டதாக வருத்தப்பட்டது உண்டா?

ரஜினிகாந்த் : ஒரு நொடி கூட அதை நினைத்து வருத்தப்பட்டது கிடையாது.

கேள்வி : வாழ்க்கையில் இறுதிக்காலத்தில் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

ரஜினிகாந்த் : ஒரு நடிகனாக வந்து மக்களை மகிழ்வித்திருக்கிறேன். ஒரு நடிகனாகவே எனது வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என விரும்புகிறேன்.

கேள்வி : உலகெங்கிலும் உள்ள உங்கள் ரசிகர்கள், அதாவது காவலர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ரஜினிகாந்த் : தாய், தந்தை, குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தை தான் தெய்வம். அந்த தெய்வங்களை வணங்கினால், உங்கள் பின்னால் எல்லாமே வரும். முக்கியமாக இளைஞர்களாக இருப்பவர்கள், உங்கள் குடும்பத்தை சந்தோஷப்படுத்துங்கள். ஆண்டவன் உங்களை சந்தோஷப்படுத்துவான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanth full speech at natchathira vizha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X