இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, நடிகர் மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளியான ’ஸ்பைடர்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இயக்குநர் முருகதாஸ் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஸ்பைடர்’. இந்த திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும். மகேஷ் பாபுவின் முதல் நேரடி திரைப்படம் ‘ஸ்பைடர்’. இப்படத்திற்காக மகேஷ் பாபு சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேசியுள்ளார். மேலும், கதாநாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்சிங், வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நடிகர் பரத், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலரும் நடித்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், மீண்டும் தெலுங்கு திரைப்பட உலகத்திற்கு திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல திரைப்பட வர்த்தக வல்லுநரான ரமேஷ் பாலா, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஸ்பைடர்’ திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதை பதிவிட்டார். அதில், ரஜினிகாந்த் திரைப்படம் குறித்து தெரிவித்ததாவது, “ஸ்பைடர் திரைப்படம் நன்றாக உள்ளது. நிறைய ஆக்ஷன் பாகத்துடன், நற்கருத்தையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது. படத்தின் கருவை ஏ.ஆர்.முருகதாஸ் திறம்பட கையாண்டுள்ளார். மகேஷ் பாபு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அற்புதமான திரைப்படத்தை தந்த குழுவினருக்கு வாழ்த்துகள்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, இத்திரைப்படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா, பிணம் எரிப்பவரின் மகனாக இருப்பதால், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை எதிர்மறையாக இத்திரைப்படம் சித்தரிக்கிறது என திரைப்பட விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.