சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே அண்மை காலமாகவே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. சம்பள பிரச்னை தொடர்பாக பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில், படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அளித்த பேட்டியில், சுமார் எட்டு ஆண்டுகளாக சம்பளப் பிரச்னை இருந்து வருகிறது. சம்பள விவகாரம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் போட வேண்டும். பொதுவிதிகளை புத்தகமாக அச்சிட வேண்டும். அப்போதுதான் படப்பிடிப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைக் கண்டறிந்து தீர்வு காண முடியும். இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நிலையாகவே நீடித்து வந்தது.
இதையடுத்து, ஏற்கனவே பேசி முடித்த சம்பளத்தை வழங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்களோடு வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். பொதுவிதிகள் கையெழுத்தாக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் (ஆகஸ்ட் 1) ஃபெப்சி அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா, இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படப் பிடிப்புகள் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபெப்சி நிர்வாகிகளும் அப்போது உடன்ன இருந்தனர். இரு தரப்பிற்கும் இடையே நிகழும் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ரஜினியிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.
இதன்பின் பேட்டியளித்த செல்வமணி, "தயாரிப்பாளர்கள் - ஃபெப்சி இடையே சுமூக உறவு ஏற்பட நடவடிக்கை எடுப்பதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். அதேபோல், ஃபெப்சி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனையும் சந்திக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு பிடிக்காத சில வார்த்தைகளில் 'வேலைநிறுத்தம்' என்ற வார்த்தையும் ஒன்று. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல், பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்கிற முறையில் எனது அன்பான வேண்டுகோள்" என்று குறிப்பிட்டுள்ளார்.