சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 26-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க இருக்கிறார்.
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையரிடம் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் மனு ஒன்றை அளித்தார். அதில், "வரும் டிச.26 முதல் 31 வரை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்.
தமிழகம் முழுவதிலுமிருந்து இதற்காக ரசிகர்கள் வர உள்ளனர். தினமும் காலை 8 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்கிறார். தினம் ஆயிரம் ரசிகர்கள் வரை இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.” என்று கேட்டுள்ளார்.
ரஜினியின் இந்த ரசிகர்கள் சந்திப்பு அறிவிப்பு குறித்து பேட்டியளித்த தமிழருவி மணியன், "ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது பற்றிய இறுதி முடிவை அறிவிக்கவே ரசிகர்களை சந்திக்கிறார். ஊடகங்களை சந்தித்து அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி முறைப்படி அறிவிப்பார். மற்ற தகவல்களை ரஜினிகாந்த் விரிவாக எடுத்துரைப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதன் முறையாக ரசிகர்களை ரஜினி சந்தித்தார். 32 மாவட்டங்களில் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். மீதமுள்ள 17 மாவட்ட ரசிகர்களை அடுத்த மாதமே சந்திப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காலா ஷூட்டிங் தொடங்கியதால் முழுக்க அதில் பிஸியானார் ரஜினி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது இரண்டாவது கட்டமாக மீதமுள்ள மாவட்டத்தின் ரசிகர்களையும் ரஜினி சந்திக்க உள்ளார்.
முதற்கட்ட சந்திப்பின் போது, "நம்மை விமர்சிப்பவர்களை கண்டு அஞ்சாதீர்கள். எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லாமல் போச்சு. என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறா? போருக்கு தயாராக இருங்கள்" என்று சொல்லி அனுப்பிய ரஜினி, வரும் ரசிகர்கள் சந்திப்பின் போது 'போர் முரசு கொட்டுவாரா' என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.