ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகுவதாகவும், முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த், கர்நாடகாவில் கண்டக்டராகப் பணியாற்றியவர். நடிப்பு ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு, சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவர் நடித்த முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’. இந்தப் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், அடுத்த வருடமே ‘பைரவி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த வருடத்தில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 15. அதில் பெரும்பாலானவை வில்லன் வேடம்.
ரஜினிகாந்த், தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலில் நடிக்க, ஹீரோவாக நடிக்க பல படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
42 வருடங்கள் தமிழ் சினிமாவில் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்த்துடன் கொடிகட்டிப் பறந்த ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், ரஜினிகாந்த் மக்கள் மன்றமாக மாற்றம் பெற்றுள்ளது. ஆன்லைன் மற்றும் வீதிவீதியாக விண்ணப்பங்கள் விநியோகித்தும் கட்சிக்கு ஆட்களைச் சேர்த்து வருகிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள்.
உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்தபிறகு, அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிடுகிறார் ரஜினிகாந்த். அத்துடன், நிர்வாகிகளின் பட்டியலும் வெளியாக இருக்கிறது. கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கட்சி அலுவலகமும் தயாராகி வருகிறது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதால், சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டிலும் பணியாற்ற உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஏப்ரல் மாதம் ‘2.0’ படமும், ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ‘காலா’ படமும் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படங்களுடன் சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று முடிவு செய்துள்ள ரஜினிகாந்த், புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.
ஆனால், அவருடைய ரசிகர்களோ இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு மகுடம் சூட்டுவது போல் நல்ல அரசியல் படமாக அது இருக்க வேண்டும் என்று கூறியுள்ள ரசிகர்கள், ஷங்கர் இயக்கத்தில் ‘முதல்வன்’ பார்ட் 2 அல்லது பா.இரஞ்சித் இயக்கத்தில் இன்னொரு படம் என அவர்களே ஆப்ஷனும் தந்திருக்கிறார்களாம். ஆனால், அதற்கு ரஜினி இன்னும் ஓகே சொல்லவில்லை என்கிறார்கள்.