ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகத் தயாராகியுள்ள ‘2.0’, அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆனால், ஒரு பாடல் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்த அந்த பாடல், சமீபத்தில் முடிவடைந்தது. ரஜினி முன்னிலையில் பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்தனர்.
இந்நிலையில், வருகிற 27ஆம் தேதி துபாயில் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணமாக 6 பேர் கொண்ட மேஜைக்கு இந்திய மதிப்பில் 3,71,625 ரூபாயும், 8 பேர் கொண்ட மேஜைக்கு 4,69,179 ரூபாயும், 12 பேர் கொண்ட மேஜைக்கு 6,81,637 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே, இசை வெளியீட்டு விழாவை இங்கு நடத்தாமல் துபாயில் நடத்துவதால், தமிழ்நாட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் அங்கு நடக்கும் விஷயங்கள் உடனுக்குடன் தெரிந்துவிடும் என்பதால், தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டுள்ளனர்.