ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள படம் 2.0. கிட்டத்தட்ட ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம், அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Advertisment
ஏற்கனவே இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளை தயாரிப்பு நிறுவனமான 'லைகா' தொடங்கிவிட்டது. அதன் முதல் பகுதியாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் ஸ்டூடியோஸில் இருந்து கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி பிரம்மாண்டமான 2.0 ராட்சத ஹாட் பலூன் பறக்க விடப்பட்டது. ஹாலிவுட் ஸ்டூடியோவில் இருந்து தமிழ் படம் ஒன்றிற்காக புரமோஷன் செய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
அதிலிருந்து தொடர்ச்சியாக படத்தின் சில ஸ்டில்கள் வெளியானது. அதில் ரஜினிகாந்தின் தோற்றம், அக்ஷய் குமாரின் மிரட்டல் ஸ்டில்கள் இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, படத்தின் மேக்கிங் வீடியோவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
சுமார் ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவை இதுவரை 7,991,495 பேர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவில் ரஜினிக்கும், அக்ஷய்க்கும் போடப்பட்ட மேக்கப், படத்தின் செட் அமைத்தல் வேலை, சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், பீரங்கி செட் போன்றவை இடம் பெற்றிருந்தன. பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக காணப்பட்ட அந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம், துபாயில் 2.0 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும், நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் டீசர் வெளியீட்டு விழாவும், டிசம்பர் மாதத்தில் நம்ம சிங்கார சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடத்தப்படயிருப்பதாக லைகா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராஜூ மகாலிங்கம் இன்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"Festivities to Begin" Come Oct -Audio Release in Dubai!!! Nov-Teaser in Hyderabad and Dec-Trailer in Namma Singara Chennai!!! 2.0 Loading!!