‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக டிசம்பர் 1ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ராஜ்புத் கர்ன சேனா அழைப்பு விடுத்துள்ளது.
சஞ்சய் லீயா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. குறிப்பாக, ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை என்ற அமைப்பு, பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்து வருகிறது. பலமுறை ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போராட்டங்கள் நடத்தியதோடு, செட்டின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ‘பத்மாவதி’ படத்தின் போஸ்டரில் உள்ள பிரியங்கா சோப்ரா படத்தை, குஜராத்தின் சூரத் நகரில் ரங்கோலி ஓவியமாக வரைந்திருந்தார் ஓவியர் கரண் கே. சுமார் 48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். பிரியங்கா சோப்ரா போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.
திடீரென என்கிருந்தோ வந்த 100க்கும் மேற்பட்ட கர்ன சேனை அமைப்பினர், ஓவியத்தை சிதைத்து அட்டகாசம் செய்தனர். இதனால் மனமுடைந்த ஓவியர் கரண் கே, ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். நவம்பர் மாதம் 17ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ராஜஸ்தானில் இந்தப் படத்தால் நிகழ்ந்துவரும் பிரச்னை காரணமாக டிசம்பர் 1ஆம் தேதிக்கு ரிலீஸைத் தள்ளிவைத்துள்ளனர்.
ஆனால், அன்றும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாதபடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உச்சபட்சமாக தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் தலைகளைக்கு 50 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை அறிவித்துள்ளனர். இதனால், அவர்கள் இருவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்துடன், சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பித்ததில் சரியாக தகவல்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என சென்சார் போர்டு அந்த சான்றிதழை நிராகரித்துள்ளது. சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கும்போது படத்தைப் பார்த்து சான்றிதழ் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சென்சார் போர்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘பத்மாவதி’ படம் ரிலீஸாக இருக்கும் டிசம்பர் 1ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை. ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அந்த அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதனால், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.