பாலா படத்துக்கு வசனம் எழுதுகிறார் ‘ஜோக்கர்’ ராஜுமுருகன்

பாலா இயக்கவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்துக்கு, ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார்.

பாலா இயக்கவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்துக்கு, ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார்.

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவர்கொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ‘அர்ஜுன் ரெட்டி’, 41 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. எல்லா இடங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய பலர் போட்டி போட்டனர்.

கடைசியாக, நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் ரீமேக்கை பாலா இயக்குவதாகவும் தெரிவித்தனர். தனக்கு ‘சேது’ மூலம் வாழ்க்கை கொடுத்த பாலாவை, செண்டிமெண்ட் படி தன் மகனையும் இயக்கச் சொல்லியிருக்கிறார் விக்ரம்.

தமிழில் இந்தப் படத்துக்கு ‘வர்மா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம் என பல தேடல்களுக்கு மத்தியில், கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரோ ராஜேஷ் எம் செல்வா இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கப் போகிறார்.

ஹீரோயின் உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட யார் பெயரும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன் வசனம் எழுதுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. பிப்ரவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close