சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
‘தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். ஆனால், அந்தப் படங்கள் சரியாகப் போகாததால், தமிழில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.
இன்றைக்கு, தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். ஆனாலும், தமிழிலும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை அவரை விடவேயில்லை. எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் சரியாகப் போகவில்லை.
இருந்தாலும், வினோத் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அவருக்கு கைகொடுத்துள்ளது. படம் சூப்பர் ஹிட்டாக, கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங்கின் ரொமான்ஸும் ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. இதன்மூலம் தமிழில் ஒரு வெற்றிப் படத்தையும் கொடுத்துவிட்டார் ரகுல் ப்ரீத்சிங்.
அதன் பலனாக, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சாய் பல்லவியும் நடித்து வருகிறார். அத்துடன், கார்த்தி ஜோடியாக மறுபடியும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
‘சீம ராஜா’ படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை ஹீரோயினாகத் தேர்வு செய்ததும் ஒரு முக்கியக் காரணம். அந்த வரிசையில் இப்போது ரகுல் ப்ரீத்சிங்கும் இணைய இருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத்சிங் மூலம், தெலுங்கு மார்க்கெட்டையும் கைப்பற்ற நினைக்கிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.