‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக அரசியல் கூட்டம் நடக்கும் காட்சியை காரைக்குடியில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.
ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சாமி’. விக்ரம் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், விவேக், கோட்டா சீனிவாச ராவ், ரமேஷ் கண்ணா, விஜயகுமார், மனோரமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்.
‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக த்ரிஷா அறிவித்தார்.
அவரை சமாதானப்படுத்தவோ அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யமால், த்ரிஷா இல்லாத மற்ற காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். அதில், அரசியல் கூட்டம் நடக்கும் காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்தக் காட்சியில், 100க்கும் மேற்பட்ட துணை நடிகர் - நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், பெருமாள் பிச்சையின் 29வது நினைவு தினம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பெருமாள் பிச்சை யார் என நினைவிருக்கிறதா? ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாசராவின் பெயர்தான் அது. அவரின் இறப்புக்குப் பழிவாங்கும் வில்லனாக பாபி சிம்ஹா இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த ஷிபு தமீம்ஸ், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.