சாய் பல்லவி நடித்துள்ள முதல் தமிழ்ப்படமான ‘கரு’, பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. மலர் டீச்சரிடம் மனதைப் பறிகொடுக்காத இளைஞர்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம். தெலுங்கில் ‘ஃபிடா’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
‘கரு’ படத்தை, விஜய் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், அபார்ஷனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. இந்தப் படம், பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்துள்ளது. ஜனவரி 25ஆம் தேதி ‘2.0’ ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தேதியில் ‘கரு’ ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ரிலீஸாவதால், தெலுங்கில் சரியான தேதி கிடைக்கவில்லை. காரணம், அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படம், ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகிறது. ‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் ரிலீஸாகும் படம் என்பதால், அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
தமிழிலும், ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ மற்றும் விஷாலின் ‘இரும்புத்திரை’ போன்ற படங்கள் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாவதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. எனவேதான், பிப்ரவரி 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.