‘இரும்புத்திரை’ படத்தில் விஷாலின் மன அழுத்தத்தைப் போக்கி ஆறுதலாக இருக்கும் மனநல மருத்துவராக நடித்துள்ளார் சமந்தா.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், உளவியலில் பி.ஹெச்டி. படித்த மனநல ஆலோசகராக நடித்துள்ளார் சமந்தா. ‘டாக்டர் ரதிதேவி’ என்பது அவருடைய கேரக்டர் பெயர். இந்த மாதிரி கேரக்டரில் சமந்தா நடிப்பது இதுதான் முதல்முறை.
விஷாலின் மன அழுத்தத்தைப் போக்கி, அவருக்கு ஆறுதல் தருபவராக சமந்தா நடித்துள்ளார். அத்துடன், வில்லன்களைக் கண்டுபிடிக்க விஷாலுக்கு க்ளூ தந்தும் உதவி செய்பவராக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.