‘யு டர்ன்’ தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சமந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கன்னடப் படமான ‘யு டர்ன்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில், சமந்தா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடப் படமான ‘யு டர்ன்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில், சமந்தா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பவண் குமார் எழுதி, இயக்கி, தயாரித்த கன்னடப் படம் ‘யு டர்ன்’. த்ரில்லர் படமான இது, 2016ஆம் ஆண்டு ரிலீஸானது. பெண்ணை மையப்படுத்திய இந்தப் படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் பயிற்சி நிருபராகப் பணியாற்றும் வேடத்தில் ஷ்ரத்தா நடித்திருந்தார்.

‘யு டர்ன்’ படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. எனவே, அதை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய பலரும் போட்டி போட்டனர். ‘சைத்தான்’ மற்றும் ‘சத்யா’ படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இந்தப் படத்தைத் தமிழில் இயக்க முயற்சிகள் மேற்கொண்டார். நயன்தாராவை ஹீரோயினாக வைத்து அவர் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார்.

இந்நிலையில், ‘யு டர்ன்’ தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமந்தாவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கன்னடத்தில் ‘யு டர்ன்’ படத்தை இயக்கிய பவண் குமாரே தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்குகிறார். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

×Close
×Close