சந்தானம் நடிப்பில் சேதுராமன் இயக்கியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சந்தானத்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விடிவி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வைபவி ஷாண்டில்யா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், காமெடியனாக விவேக் நடித்துள்ளார். இவர்களுடன் சம்பத் ராஜ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சிம்பு, இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். முதலில் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அதன்பிறகு, அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையமைப்பதாக இருந்தது. கடைசியில், சிம்பு இசையமைக்கப் போவதாக அறிவித்தார் சந்தானம். “என்னுடைய காட்பாதர் மற்றும் சிறந்த மனிதரான சிம்பு, முதல்முறையாக ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு இசையமைக்கிறார்” எனக் குறிப்பிட்டார் சிம்பு.
‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. யுவன் சங்கர் ராஜா, அனிருத், லியோன் ஜேம்ஸ் என மூன்று இசையமைப்பாளர்கள் மூன்று பாடல்களைப் பாட, சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் – உஷா இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர். பிரபல பின்னணிப் பாடகரான உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன், இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடி பாடகராக அறிமுகமாகிறார்.
அனிருத் பாடிய ‘கலக்கு மச்சான்’ பாடலின் லிரில் வீடியோ, கடந்த 5ஆம் தேதி ரிலீஸானது. அந்த வீடியோவை இதுவரை ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன், சில நாட்களுக்கு முன்பு வெளியான யுவன் பாடிய ‘காதல் தேவதை’ புரோமோ வீடியோவும் ஹிட்டடித்துள்ள நிலையில், இன்று அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகிறது. பாடலின் இசையைக் கேட்டு மகிழ்ந்த சிம்பு ரசிகர்கள், இன்று முதல் அவரது பின்னணி இசையைக் கேட்க இருக்கின்றனர்.