Sarvam Thaala Mayam Review: பிற்படுத்தப்பட்ட இளைஞனின் சங்கீத தாகம்!

GV Prakash Starrer Sarvam Thaala Mayam Movie Review in Tamil: படம் முழுவதும் இசையை தூவி இருக்கிறார் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்.

By: Updated: February 1, 2019, 05:33:03 PM

Sarvam Thaala Mayam Review | சர்வம் தாளமயம் விமர்சனம்

நடிகர்கள்    – ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, குமரவேல்,வினீத்
இயக்குனர் – ராஜிவ் மேனன்
ரேட்டிங்      – 3.5/5

தமிழ் சினிமாவில் எத்தனை திரைப்படங்கள் கர்நாடக சங்கீதத்தை மைய்யப்படுத்தி
வந்திருக்கின்றன? சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் ? ஒன்று அல்லது இரண்டு. ‘சர்வம் தாளமயம்’ பார்த்த பின்பு உங்கள் நினைவில் கர்நாடக சங்கீதத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் இது முதல் இடத்தில் இருக்கும். இது வெறும் சங்கீதம் மட்டும் அல்ல; இதில் சமூக அரசியலும் கலந்து உள்ளது. திறமை இருந்து, நியாயமாக கிடைக்க கூடிய பல வாய்ப்புகள் சாதியினால், மதத்தினால், இந்த சமுதாயத்தில் நசுக்கப்படுகின்றன. அவ்வாறு நசுக்கும்பொழுது அதை கண்டு வெம்பி துயரப்படுவோர் பலர்; அதில் மீண்டெழுந்து சாதிப்போர் சிலர் – அந்த சிலரை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டது தான் சர்வம் தாளமயம்.

ராஜிவ் மேனன் கடைசியாக தமிழில் இயக்கிய படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . அது 2001ம் ஆண்டு வெளிவந்தது.18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் ரி-என்ட்ரி தந்துள்ளார். இந்த படத்தில் பீட்டர் ஜான்சனாக ஜி.வி.பிரகாஷ், வேம்பு ஐயராக நெடுமுடி வேணு, சாரவாக அபர்ணா பாலமுரளி, ஜான்சனாக குமரவேல், மணியாக வினீத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதி விஜய்யின் தீவிர ரசிகன் பீட்டர். விஜய்யின் படம் ரிலீஸ் என்றால் தன்னுடைய சகாக்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என அடிதடியாய் கொண்டாடுவார். தனக்கு எக்ஸாம் இருந்தாலும் அதை கட் செய்துவிட்டு படத்திற்கு செல்வார். இவரின் தந்தையான ஜான்சன், மிருதங்கம் செய்யும் தொழிலாளி. அவர் ஏரியாவில் உள்ள அணைத்து மிருதங்க வித்தவான்களும் இவரிடம் தான் தங்களது மிருதங்கத்தை வாங்கவோ/சரி செய்யவோ முற்படுவார்கள், அவர்களில் ஒருவர்தான் வேம்பு ஐயர். அவரின் சிஷ்யனான மணி அவரை நிழல் போல் பாதுகாத்து கொண்டு இருப்பான். பத்ம பூஷன் வேம்பு ஐயரை பார்த்தால் அனைவருக்கும் பயம், அவரிடம் பேசவே தயங்குவார்கள். அவரை பொறுத்வரை கர்நாடக சங்கீதம் தான் சிறந்தது, சினிமா மற்றும் டிவி போன்றவற்றில் வருவது சர்கஸ் கூத்து.

ஒரு நாள் சரி செய்த மிருதங்கத்தை எடுத்து கொண்டு ஐயரின் கச்சேரிக்கு பீட்டர் செல்ல அவரின் வாசிப்பை பார்த்து மயங்குகிறான். தனது தந்தை மிருதங்கத்தை உருவாக்கியே பார்த்த அவன், அதை வாசிக்க ஆசைப்படுகிறான். ஆனால், சமூகம் அவன் ஆசைப்டுவது எதோ தேச விரோத குற்றம் போல் அவனை நினைக்கவைக்கிறது. வேம்பு ஐயர் தன்னை எப்படியாவது சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதிற்காக அனைத்து தியாகங்களையும் செய்கிறான், தனது தலைவனின் படத்திற்கு செய்யும் ஆதர்ஷன ரிலீஸ் வேலைகள் உட்பட.

மழையிலும், வெய்யிலிலும் ஐயரின் வீட்டின் முன்பு தவம் கிடக்கிறான். இறுதியில் ஐயர் அவரை வீட்டினுள் அனுமதித்து சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு புறம் சென்றுகொண்டு இருக்க, தனக்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் பொழுது உதவிய சாராவின் மீது காதல் கொள்கிறான், விரட்டி விரட்டி காதல் செய்து இறுதியில் அவளை சம்மதிக்க வைக்கிறான்.

இசை அனைவருக்கும் சமம்

ஐயர் இவனை ஏற்று கொண்டாலும், அவரின் மூத்த சிஷ்யன் மணி, பீட்டரை வெறுக்கிறான். அவனது திறமையை விட, அவனின் ஜாதி மணியின் கண்ணை உறுத்துகிறது. பீட்டரை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என நினைக்கிறன். ஆனால் மணியின் சூட்சமம் புரிந்த ஐயர், வீட்டை விட்டு அவனை அனுப்பி விடுகிறார். தன்னை அவமதித்த குருவையும், பீட்டரையும், பழி வாங்க நினைக்கிறன் மணி; அதற்கு தொலைக்காட்சியில் பணிபுரியும் தன் தங்கை அஞ்சனாவை (திவ்யதர்ஷினி) நாடுகிறான். ‘சங்கீத சாம்ராட்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது அஞ்சனா  பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனம். எந்த வித திறமையும் இல்லாத மணி, தன் தங்கையின் பரிந்துரையால் சங்கீத சாம்ராட் நடுவராக நியமிக்கப்படுகிறான். ஐயரிடம் மிருதங்கத்தை இரவும் பகலுமாக பயிலும் பீட்டர், சங்கீத சாம்ராட் நிகழ்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறான். முதலில் சினிமா மற்றும் டிவி சங்கீதத்தை அறவே வெறுத்த ஐயர் பீட்டருக்காக தன்னை மாற்றி கொள்கிறார்.

சங்கீத சாம்ராட் போட்டியில் பீட்டர் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறார், மணியின் சதியை மீறி நிகழிச்சியில் பீட்டர் வெற்றி பெற்றாரா என்பதை சுவாரசியம் குறையாமல் அற்புதமான காட்சிகளுடன் இயக்கி இருக்கிறார் ராஜிவ் மேனன். பீட்டராக ஜிவி அருமையாக நடித்து இருக்கிறார். ஒரு ரசிகனாக அவர் செய்யும் சேட்டைகள், பின்பு சங்கீதத்தை கற்றுக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் என நடிப்பில் பல பரிமாணங்களை காண்பித்திருக்கிறார். இவர் நடித்த படங்களில் நிச்சயம் இது டாப். ஐயராக நெடுமுடி வேணு தனது கலையுலக அனுபவங்களை மொத்தமாக இந்த படத்தில் உபயோகப்படுத்தியுள்ளார். இந்தியனுக்கு பிறகு இவருக்கு சரியான ரோல்!

சர்வம் தாளமயம்

படத்தின் முதுகெலும்பு இசை தான். ஒரு குழந்தை பிறந்த உடன் துணையாய் வருகின்ற அழுகையும் இசை தான், இறந்த பின்பு ஒரு மனிதனுக்கு துணையாய் வருகின்ற மேளமும் இசை தான். இந்த அடிப்படியில் தான் படம் முழுவதும் இசையை தூவி இருக்கிறார் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான். ஒரு ஒரு காட்சிக்கும் பின்ணணி இசையின் மூலம் அந்த காட்சியின் முக்கியவத்துவதை புரிய வைக்கிறார் ரகுமான். குறிப்பாக சர்வம் தாள மையம் என்கின்ற டைட்டில் ட்ராக் நமக்கு 90ஸ் ரகுமானை கண்முன் நிறுத்துகிறது.”Rahman is Back” லாம் இல்லை, அவர் எப்பொழுதுமே இங்கே தான் இருக்கிறார்; அவருக்கான சரியான களம் அமைத்துக்கொடுப்பது இயக்குனர்களின் கையில் தான் இருக்கிறது.

படத்தின் விசுவல்ஸ் அத்தனை அழகாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் சிறப்பான பணியை செய்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இசையை பயில பீட்டர் பயணிக்கும் பாதையை நமக்கு கண்முன்னே காண்பித்திருக்கிறார். இது போன்ற கதையில், எந்த இடத்திலும் எந்த மதத்தையும் தாக்காமல், அதே சமயம் சொல்லப்படவேண்டிய கருத்தை ஆணித்தரமாக சொல்லி இருக்கின்ற ராஜிவ் மேனனுக்கும் அவருக்கு உதவி புரிந்த இணை இயக்குனர் விஜய் பாலாஜிக்கும் நன்றி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sarvam thaala mayam movie review

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X