வேறு வேறு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசம் தான் ‘கொடி வீரன்’. அதை, வழக்கமான தன்னுடைய அரிவாள், கத்தியோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.
பசுபதி, தன் தங்கை பூர்ணாவின் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர். அவருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகும் பசுபதி, நன்னடத்தை விதி மூலம் விரைவில் விடுதலை ஆகிறார். அவரையும், அவர் தங்கை கணவரையும் ஜெயிலுக்கு அனுப்பத் துடிக்கிறார் நேர்மையான அதிகாரியான விதார்த்.
விதார்த்தின் தங்கையான மகிமாவுக்கும், சசிகுமாருக்கும் காதல். தன் அண்ணன் விதார்த்தைத் திருமணம் செய்து கொண்டால், நானும் உன் அண்ணன் சசிகுமாரைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சனுஷாவிடம் சொல்கிறார் மகிமா நம்பியார். சனுஷாவும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.
தன் தங்கை கணவனான விதார்த்தைக் கொல்ல பசுபதி கும்பல் வெறிபிடித்து அலைகிறது. அதிலிருந்து விதார்த் உள்ளிட்ட தன் குடும்பத்தை சசிகுமார் எப்படி காப்பாற்றுகிறார்? என்பது குத்தும், வெட்டுமான ரத்தக்கதை.
சசிகுமார், முத்தையா தனித்தனியாகப் படம் எடுத்தாலே ஏகப்பட்ட வெட்டுக்குத்துகளும், ரத்தக்காவுகளும் இருக்கும். இருவரும் ஒரே படத்தில் இணைந்தால்? ‘சதக் சதக்’ என யாரையாவது குத்திக்கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால் நம்மையும் குத்திவிடுவார்களோ என்ற அளவுக்கு பயமுறுத்துகிறார்கள்.
வழக்கம்போல சசிகுமார் நடித்திருக்கிறார்(?). சசிகுமார் - சனுஷா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன அளவுக்கு, சசிகுமார் - மகிமா நம்பியார் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. பல காட்சிகளில் ரொம்ப சின்னப்பெண்ணாகத் தெரிகிறார் மகிமா. அவருக்கும், முரட்டு தாடி வைத்திருக்கும் சசிகுமாருக்கும் ஒட்டவில்லை.
என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையில் அப்படியே டி.இமான் சாயல். ஆனாலும், ரசிக்க வைக்கிறார். முத்தையாவின் வழக்கமான பாசக்கதை தான் என்றாலும், ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். ‘பி’ அண்ட் ‘சி’ செண்டருக்கு ஏற்ற படம்.