சசிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கொடி வீரன்’, டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் ஹீரோவாக நடிக்க, முத்தையா இயக்கியுள்ள படம் ‘கொடி வீரன்’. சசிகுமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, தங்கையாக சனுஷா நடித்துள்ளார். பூர்ணா, வில்லியாக நடித்துள்ளார். மேலும், சித்தார்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கடுத்த வாரங்களிலும் தியேட்டர்கள் கிடைக்காததால், வருகிற 30ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகுமாரின் அத்தை மகனும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமார், கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், “மதுரை அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின் பேரில், அன்புச்செழியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அன்புச்செழியனைப் பிடிக்க, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்திற்கு ரெட் போடப்பட்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
எனவே, அன்புச்செழியனுக்கு எதிராக ஒரு குரூப், ஆதரவாக ஒரு குரூப் என தமிழ் சினிமா இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ‘அவரைப் போல் நல்லவர் யாரும் கிடையாது’ என்றும், ‘அவரை மாதிரி கெட்டவர் இந்த உலகத்திலேயே கிடையாது’ என்றும் அனுபவப்பட்டவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ‘கொடி வீரன்’ படம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி ரிலீஸாகிறது என நேற்று இரவு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.