சென்னை: இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. மொத்தம் நான்கு மொழிகளில் வெளியாக இருந்த இப்படத்தைக் கன்னட மொழியில் வெளியிடக் கூடாதென்று கர்நாடகாவில் போராட்டம் நடத்தினர். காரணம், சத்யராஜ் நடித்த படம் என்பதுதான்.
சில வருடங்களுக்கு முன்பு காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக நடிகர் சத்யராஜ் தெரிவித்த கருத்துதான் இப்போதைய பிரச்னைக்கு காரணமாகியுள்ளது. நடிகர் சத்யராஜ் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். பின்னர் நடிகர் சத்யராஜ் “நான் நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருக்கவும் சாகவுமே விரும்புகிறேன். தொடர்ந்து தமிழுக்காகவும் தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுப்பேன். ஆனால் என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு வீணாகக் கூடாது. எனவே என் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகே சற்று இந்த விவகாரம் ஓய்ந்தது.
ஆனால் நடிகர்களின் எல்லையும் கருத்து சுதந்திரமும் இங்கே கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இது நடிகர் சத்யராஜின் பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நடிகர்கள், சினிமாக்காரர்களின் பிரச்னை. பாஜகவின் தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜாவும், தமிழ், தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து நடிகர்கள் பேசும் கருத்துகள் மேலோட்டமானவை, ஆதாயம் தேடுபவை என்று கூறியுள்ளார்.
நடிகர்களின் எல்லை எது?
நடிகர் சத்யராஜ் மட்டுமல்ல, தமிழில் கமல்ஹாசன் முதல் பாலிவுட்டில் அமிர்கான் வரை தங்களின் கருத்துகளுக்காகப் பெரும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கின்றனர். உலகில் எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான், அதுவும் தென்னிந்தியாவில்தான் நடிகர்களைக் கடவுகளுக்கு நிகராகத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அவர்கள் கருத்து கூறியே ஆக வேண்டும். போராட்டங்களில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்று ரசிகர்களும் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். நடிகர்களும் அதனைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும் பிரபலப்படுத்திக்கொள்ளவும் ஆசைப்பட்டுவிடுகிறார்கள். இறுதியில் அவர்கள் சர்ச்சைக்குள் சிக்கி, இந்த நாட்டில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்கிறார்கள்.
“அவர்களை யார் இப்படியெல்லாம் கருத்து சொல்ல சொன்னது. இதெல்லாம் இவர்களுக்கு தேவையா, நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால் இப்படியெல்லாம் நடக்குமா?” நடிகர்களைக் கருத்து தெரிவித்தே ஆக வேண்டும் என்று பேசும் அதே மக்கள்தான் இதையும் சொல்கிறார்கள். கடைசியில் அவர்கள் சொல்லும் கருத்துகள் விவகாரமாக்கப்பட்டு அவர்களுக்கே சிக்கலாகிவிடுகிறது.
உதாரணங்கள் பல இருக்கின்றன. சமீபத்திய உதாரணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லாரன்ஸும், ஹிப் ஹாப் ஆதியும் பெற்ற எதிர்வினை, பிரகாஷ்ராஜ் தொலைக்காட்சி பேட்டியில் பாதியிலேயே வெளியேறியது ஆகியவை.
நடிகன், நடிகன் மட்டுமே!
நடிகன் என்பது ஒரு தொழில். சினிமா அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு நடிகன் இப்படித்தான் இருக்க வேண்டும். கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். நடிகர்களும் தங்களின் நடிகன் என்ற அடையாளத்தை முன்னிறுத்தாமல் ஒரு குடிமகனாகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும்.
அப்படிக் கொடுக்கும்போதும் நாகரிக எல்லைகளைத் தாண்டிப் பேசக் கூடாது. இதெல்லாம் சாத்தியமில்லை என்றால் சும்மா இருந்துவிடுவது சிறந்தது. திரைப்படம் என்பது மாநில, மொழி எல்லைகளைத் தாண்டிய வர்த்தகத்தைக் கொண்டது. மாநிலம் தாண்டிய சந்தையைக் குறிவைக்கும் கலைஞர்கள் அதற்கேற்பத் தங்கள் பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இதைத்தான் சத்யராஜின் வீர முழக்கமும் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையும் உணர்த்துகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.