மிஷ்கினின் உதவி இயக்குநரும் தம்பியுமான ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கினின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராம், பூர்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சவரக்கத்தி.
ஒரு பக்கம் காதுகேளாத மனைவியை வைத்துக்கொண்டு வாய்ச்சவடால் விடும் பார்பர் பிச்சை. இன்னொரு பக்கம் பெயில் முடிய இன்னும் சில மணி நேரமே இருக்கும் மங்கா. அந்த நேரத்தையும் வெறிகொண்டு கடத்திக்கொண்டிருக்கிறான். ஒரு எளிய பார்பரான பிச்சை சாதாரணமாக அவனிடம் மோத மங்கா அவனை கொலைவெறி கொண்டு துரத்துவதும் அவன் எப்படி தப்பித்தான் என்பதும் தன் கதை.
இந்த படு சீரியஸான கதையை ஒரு பிளாக் ஹியூமர் படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். வெகு நாட்கள் கழித்து சிச்சுவேஷன் காமெடியில் அசரடிக்கிறது சவரக்கத்தி.
எப்போதுமே எளிய மனிதர்களை வைத்து ஒரு எமோஷனல் கதையை நகர்த்துவதில் மிஷ்கின் கெட்டிக்காரர். அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையை தூவியிருப்பது ஒரு சுவராஸ்யமான அனுபவத்தை தருகிறது.
முதல் காட்சியிலேயே ’படக்கூடாத’ இடத்தில் கடிபட்டு படம் முழுக்க குனிந்தபடியே ரவுடிசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஒருவன், ஐடியா சொல்லி அதற்கும் வாங்கி கட்டிக்கொள்ளும் ஒருவன், ஃபிலாசபி பைத்தியமாக ஷாஜி என ஒவ்வொரு கேரக்டருமே தன் பங்குக்கு ரசிக்க வைக்கிறார்கள்.
படத்தில் ’பிச்சை’ப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் ராம். அட்டகாசம் சார்! ஒரே நேரத்தில் வீராப்பையும் பரிதாபத்தையும் அனாயசமாக காட்டுகிறார்.
மிஷ்கினுக்கு இது சர்வசாதாரணம். மங்காவாக மிரட்டுகிறார்.
பூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும் அது கேரக்டர் இயல்பு என்று காட்டியதால் ரசிக்க முடிகிறது. கரும்பு ஜுஸ் கடையில் இருந்து வெளியில் வந்து மிரட்டி மாட்டிக்கொள்ளும்போது பரிதாபம் ஏற்படுகிறது.
பூங்கா துரத்தல்கள், பார்பர் ஷபபில் செய்யும் ரவுடிசம், குப்பையோடு குப்பையாக ஒளிந்திருக்கும் பிச்சை, மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் பூர்ணா மற்றும் குழந்தைகள் என படம் நெடுகிலும் க்ளாப்ஸ் அள்ளுகிறது.
ஓடிப்போன பெண்ணின் தாய், பெத்தப்பா, ராமின் குழந்தைகள் என்று வழக்கம்போல மிஷ்கின் பட சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட கவனம் ஈர்க்கின்றன.
கேமரா, இசை, எடிட்டிங் எல்லாமே மிஷ்கின் படத்திற்கான பெர்ஃபெக்ஷன்களை காட்டுகின்றன.
எளிய மனிதர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே டோனில் மிஷ்கினிசமாக நடந்துகொள்வது உறுத்துகிறது. மிஷ்கின் படம் என்றால் எல்லோருமே மிஷ்கினாக தெரிவது எப்போது மாறுமோ?
இயக்குநர் ஆதித்யா என்று டைட்டில் வருகிறது. ஆனால் மிஷ்கின் படமாகத் தான் பதிகிறது. ஒன்று ஆதித்யாவை இயக்கவிட்டிருக்கலாம். அல்லது மிஷ்கின் தலையிடாமல் இருந்திருக்கலாம். முதல் பாதியில் கொடூரமாக காட்டப்படும் அத்தனை கேரக்டர்களும் இரண்டாம் பாதியில் தங்கள் நியாயங்களை சொல்லி எமோஷனல் ஆகி திருந்துவது மிஷ்கினிச வழக்கம். அது இதிலும் தொடர்கிறது.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது அந்த க்ளைமாக்ஸ்.
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்று கேட்டால் பதில் இல்லை. ஆனாலும் மிஷ்கின் இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.
மிஷ்கினிச தாக்கம் கட்டாயம் ஏற்படும்.