சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
‘கூடல் நகர்’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ என இதுவரை 5 படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதில், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படம் தேசிய விருது பெற்றுள்ளது. ஆனாலும், இவர் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘தர்மதுரை’, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தைத் தொடங்குவதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதால், இந்தப் படம் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது.
அடுத்ததாக, அதர்வாவை வைத்து ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் சீனு ராமசாமி. ஆனால், அதன்பிறகு அந்தப் படத்தைப் பற்றி எந்தவிதமான தகவலும் இல்லை. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை வைத்து அடுத்த படத்தை சீனு ராமசாமி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை, உதயநிதி ஸ்டாலினே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
,
சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது அவர் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.