scorecardresearch

வியக்க வைக்கிறார்… சோதிக்கிறார்… சிந்திக்க வைக்கிறார்: சீதக்காதி விமர்சனம்

Vijay Sethupathi Starrer Seethakaathi Movie Review in Tamil : நாடக கலையின் அற்புதத்தை உணர்த்திய படம்

Seethakaathi Review in Tamil, சீதக்காதி விமர்சனம்
Seethakaathi Review in Tamil, சீதக்காதி விமர்சனம்

Seethakaathi Review : விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சீதக்காதி.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் சார்பில் அருண் வைத்தியநாதன் படத்தை தயாரித்துள்ளார்.

Seethakaathi Review : சீதக்காதி விமர்சனம்

50 வருடங்களாக நாடக கம்பெனி நடத்தி வருபவர் அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி). சிறு வயது முதலே பல நாடகங்களில் நடித்துள்ள இவர், ஒரு கட்டத்தில் அவரே இயக்கியும் வருகிறார். சின்ன வயதில் லவ குசா நாடகம் தொடங்கி, சாவித்ரி, அலாவுதின் என நாடகங்களாக கடந்து செல்கிறது காட்சிகள்.

நாடகம் முடிந்து வீட்டிக்கு செல்லும் அய்யாவுக்கு காத்திருக்கிறது ஒரு செய்தி. அந்த விஷயம் அவரை பெரிதாக பாதிக்க, அதே கனத்த இதயத்துடன் மறுநாள் நாடகத்தில் நடிக்கிறார். நடித்துக் கொண்டிருக்கும்போதே அவரின் உயிர் அவர் அதிகமாக விரும்பிய மேடையிலேயே பிரிகிறது.

அய்யாவின் மறைவை காரணம் காட்டி நாடகங்களை நிறுத்தக் கூடாது என முடிவெடுக்கும் பரசுராமன் (மௌலி), நடகத்தை தொடர்ச்சியாக நடத்த முடிவெடுக்கிறார். அவரின் வார்த்தைகளை ஏற்று நடிகர்கள் நாடகத்திற்கு ஏற்பாடு செய்ய, வழக்கத்தை விட பிரம்மிப்பாக சரவணன் (ராஜ்குமார்) நடிக்க, இறுதியில் நடிப்பது அவர்கள் இல்லை அய்யா தான் என தெரிய வருகிறது…

குழம்ப வேண்டாம். நடிகர்களின் உடலுக்குள் அய்யாவின் ஆன்மா புகுந்து நடிக்கிறது. இதனை பார்த்த ஒரு இயக்குநர் பட வாய்ப்புக்கு நடிகரை வேண்டுமென கேட்டு வர, இப்படம் முற்றிலுமாக மாறுபட்ட தோற்றத்தை பெறுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இங்கு தான் படமே தொடங்குகிறது.

அய்யாவை சினிமாவில் நடிக்க வைக்க பரசுராமன் ஓகே சொல்கிறார். சரவணன் மூலமாக அய்யா நடிக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வருகிறது. ஆனால் 4 வருடத்திற்கு பின்னால் அய்யா மீண்டும் காணாமல் போகிறார். ஏன் என்பது தான் கதை. அதன் காரணத்தை அழுத்தமாக கூறியிருக்கிறார், இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

பிளஸ்:

  • முதியவர் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி கொடுத்திருக்கும் பெர்ஃபாமன்ஸ்க்கு ஒரு சல்யூட். உடல் மொழியிலும், வாய்ஸ் மாடியுலேஷன் கொடுப்பதில் அக்மார்க் நடிகராக மாறியிருக்கிறார். 40 நிமிடம் வந்தாலும் மனதில் நிற்கும் காட்சிகளில் தோன்றுகிறார்.
  • அய்யா ஆன்மா மறைவுக்கு பிறகு, ராஜ்குமார் நடிப்பு வாவ் என வாயை பிளக்க வைக்கிறது. சரியாக நடிப்பதற்கு ஒரு திறமை வேண்டுமென்றால் சொதப்புவது போல் நடிப்பதற்கு தனித் திறமை வேண்டும். நடிப்பில் விஜய் சேதுபதியை தூக்கி சாப்பிட்டுவிட்டார்.
  • படத்தில் இடம்பெறும் பாஞ்சாலியின் சபதம் நாடகத்திற்காகவே மற்றொரு முறை கூட பார்க்கலாம். பாரம்பரிய நாடக கலைஞர்கள் திறமை என்ன என்று நிரூபித்திருக்கிறது சீதக்காதி.
  • புகழை தேடி சினிமாவிற்குள் குதிக்கும் சிலரை போற்றும் இந்த உலகம், கலைக்கு தகுந்த மரியாதை அளித்து விரும்பி நடிக்கும் கலைஞர்களை கவனிப்பது கூட இல்லை என்பதை போர் அடிக்காத மாதிரி இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.

மைனஸ் :

  • முதியவர் தோற்றத்தில் உடல் மொழி மற்றும் வாய்ஸ் மாடியுலேஷனை எல்லாம் மாற்றிய விஜய் சேதுபதி நடிப்பிலும் சில மாற்றங்களை காட்டியிருக்கலாம். சிறந்த சினிமா நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை பார்த்த நம்மால் நாடக கலைஞரை பார்க்க முடியவில்லை. நாடகத்தில் நடிப்பவர்களின் உடல் மொழியும், முக பாவனைகளும் முற்றிலும் வேறு. அதனை உள் வாங்கியிருந்தால், அய்யா இன்னும் கெத்தாக இருந்திருப்பார்.
  • ஒரு சில இடங்களிலும் ஒரே மாதிரியான நகைச்சுவை ரிபீட் ஆவதால் பார்ப்பவர்கள் பொறுமை இழக்கிறார்கள்.
  • கிளைமேக்ஸ் நெருங்கும் காட்சிகளில் எல்லாம் படம் இழுக்குது என்ற ஃபீல் வர வைத்திருக்கிறது.
  • ஆன்மா ஆன்மா என பேசிய எல்லோரையும், ‘இது வெறும் கற்பனை கதையே’ என்பது போல் டிஸ்கிளைமர் போடுகிறது நீதிபதி (மகேந்திரன்) உரை.
  • விஜய் சேதுபதியின் 25வது படத்தை அவரை தவிர மற்ற அனைவரின் நடிப்புமே நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

மொத்தத்தில் இப்படம் நாடக கலைஞர்களுக்கான சமர்ப்பணம் என விஜய் சேதுபதி கூறியது சரியே. நவீன உலகின் வாழ்க்கைக்கு அடிமையாகிய பின்னர் நாடகங்களும் நாடக கலைஞர்களின் வாழ்வும் எவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இருப்பினும் அவர்கள் இந்த கலையின் மீது கொண்டுள்ள மரியாதையும் மதிப்பும் எக்காலமும் மாறாது என்பதை சொல்கிறது. கலைஞன் மறைந்தாலும் கலை மறையாது என்பதே கிளைமாக்ஸ் காட்சி.

மொத்தத்தில் சீதக்காதி ‘அய்யா’ வியக்க வைக்கிறார், சிரிக்க வைக்கிறார்… கொஞ்சம் பொறுமையையும் சோதிக்கிறார். ஆனால் சிந்திக்க வைக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Seethakaathi review in tamil