அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகள் : என்ன நடக்கிறது தெலுங்கு சினிமாவில்?

ஒரு பெண் பாலியல் சீண்டலுக்குள்ளானால் கொதிக்கிற சமூகமும், அரசும், ஸ்ரீரெட்டி விஷயத்தில் இன்னும் மௌனமாகவே உள்ளது. அவர் நடிகை என்பதாலா?

பாபு

சினிமா உலகில் பாலியல் தொந்தரவுகள் எந்தளவு விபரீதமாக உள்ளது என்பதற்கு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள் போதுமானது. இயக்குனர் சேகர் கம்முலா, எழுத்தாளர் கோனா வெங்கட், பாடகர் ஸ்ரீராம், தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ், இயக்குனர் கொரட்டல சிவா, நடிகர் ராணாவின் தம்பி அரிராம் என அனைவருமே பெருந்தலைகள்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர், போலீசுக்கு போவேன், நஷ்டஈடு வழக்கு தொடர்வேன் என்று பயமுறுத்தினாலும், ஸ்ரீரெட்டி மீது இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மடியில் கனம் இல்லையென்றால் புகார் தர பயம் எதற்கு?

ஸ்ரீரெட்டியின் இந்த நடவடிக்கைகளை திரையுலகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் இன்னும் அபாயகரமானதாக உள்ளது. முன்னணி நடிகைகள் எவரும் ஸ்ரீரெட்டியை ஆதரித்து ஒரு சொல் உதிர்க்கவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் பேசினால் அடுத்த கணமே திரையுலகிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். நடிகர்கள் ஆதரிக்கலாம். ஆனால், குற்றமில்லாதவன் முதலில் கல் எறியட்டும் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்போல. யாரிடமிருந்தும் கருத்து வரவில்லை. நடிகர் சங்கமோ, ஸ்ரீரெட்டியின் வாயை அடைக்க, அவரை சங்கத்தில் சேர்த்துக் கொள்வதாகவும், அடையாள அட்டை தருவதாகவும் கூறியுள்ளது. எனினும் ஸ்ரீரெட்டி தனது வாயை மூடவில்லை. தொடர்ந்து உண்மைகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஸ்ரீரெட்டியின் பெயர் குறிப்பிடாமல் பதிவொன்றை போட்டுள்ளார். உங்களுக்கு புகார் இருந்தால் போலீசுக்கு போங்க, கோர்ட்டுக்கு போங்க, ஏன் மீடியாவுக்கு போறீங்க என்பது அவரது கருத்து. ‘முடிஞ்சா போலீஸ்ல புடுச்சி குடு, இல்ல மூடடிட்டு போ’ என்பதை நாகரிக வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். பவன் கல்யாண் போன்ற ஒரு பவர்புல் நடிகர் ஸ்ரீரெட்டிக்கு எதிராக இருக்கிறார் என்பது குற்றவாளிகளுக்கு தெம்பளிக்கும் விஷயம். அதேநேரம் ஸ்ரீரெட்டிக்கு பின்னடைவு. அவர் மீடியா முன்பு தன்னை செருப்பால் அடித்து, பவன் கல்யாணுக்கு தனது நடுவிரலை காண்பித்துள்ளார். பவன் கல்யாணை அண்ணா என்று அழைக்கவும் வெட்கமாயிருக்கு என்று கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார்.

இந்தப் பிரச்சனை ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று துணை நடிகைகளை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. முன்னணி நடிகைகள் முகம் கொடுக்காத நிலையில் துணை நடிகைகள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தனர். அதில் முகம் தெரிந்த நடிகைகள் என்றால், அபூர்வா மற்றும் அம்மா, அண்ணி வேடங்களில் நடித்துவரும் சந்தியா நாயுடு இருவரும்தான். சந்தியா நாயுடு பேசும்போது, பகலில் அம்மா என்பார்கள், இரவில் அவர்களே படுக்கைக்கு வா என்பார்கள் என்றார். அவராலும் அந்த நபர்கள் யார் என்பதை சொல்ல முடியவில்லை. அதுதான் நிலைமை. சொல்ல முடியாது. சொன்னால் உடனடியாக திரையுலகம் உங்களை நிரந்தரமாக நீக்கிவிடும். இந்தப் புறக்கணிப்பு அதிகாரப்பூர்வமாக நடக்காது, மௌனமாக எந்த சத்தமும் இல்லாமல் புறக்கணித்துவிடுவார்கள்.

ஒரு பெண் பாலியல் சீண்டலுக்குள்ளானால் கொதிக்கிற சமூகமும், அரசும், ஸ்ரீரெட்டி விஷயத்தில் இன்னும் மௌனமாகவே உள்ளது. அவர் நடிகை என்பதாலா? ஆம் எனில், இந்த மௌனமும், நடிகைகள் குறித்த அரசின், சமூகத்தின் புரிதலும்தான் அவர்கள் அதிக பாலியல் சுரண்டலுக்கு ஆளாகக் காரணம்.

ஸ்ரீரெட்டிக்கு நீதி கிடைக்க அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும், அதுவே இந்தப் பிரச்சனைக்கு குறைந்தப்பட்ச நீதியாக அமையும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close