Vishnu Vishal's Silukkuvarupatti Singam Movie Review in Tamil: சிலுக்குவார்பட்டி சிங்கம்... விஷ்ணு விஷால் எனும் கலைஞன் சமீபத்தில் தான் 'ராட்சசன்' எனும் ஹை புரஃபைல், ஹை த்ரில்லர், ஹை க்ரைம் படத்தைக் கொடுத்து ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தார். அதனாலோ என்னவோ, செல்லா அய்யாவு என்பவரது இயக்கத்தில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' எனும் லைட் வெயிட் படத்தை தேர்ந்தெடுத்து தயாரித்து நடித்திருக்கிறார்.
கதைப்படி, சிலுக்குவார்பட்டியில் பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் விஷ்ணு. கண் முன்னே எப்பேற்பட்ட குற்றம் நிகழ்ந்தாலும், தட்டிக் கேட்க மாட்டார். ஆனால், அவர் ஆஃப் பாயில் சாப்பிடும் போது அதனை தட்டிவிட்டால், யாராக இருந்தாலும் 'சாத்து' தான்.
இது ஒருபுறமிருக்க, சென்னை சிட்டியின் துணை ஆணையரை பட்டப்பகலில் போட்டுத் தள்ளும் டெரர் வில்லனாக 'சைக்கிள் ஷங்கர்' எனும் கேரக்டரில் ரவி ஷங்கர். இதனால், அவரை என்கவுண்ட்டர் செய்ய சென்னை போலீஸ் முடிவெடுத்து தேடுதல் வேட்டையை தொடங்குகிறது. தலைமறைவாக இருக்கும் ரவி ஷங்கருக்கு, அமைச்சர் ஒருவர் எக்ஸ் மினிஸ்டர் மன்சூர் அலிகானை காலி செய்யும் அசைன்மென்ட் கொடுத்து, "அவனை நீ போட்டுத் தள்ளு... உன்னை நான் போலீசிடமிருந்து காப்பாற்றுகிறேன்" என்று 'டீல்' போட, சிலுக்குவார்பட்டியில் உள்ள மன்சூரை காலி செய்ய ஷேவிங் செய்து மீசையை மழித்து வேறு கெட்டப்பில் கிளம்புகிறார் வில்லன்.
அங்கே, ஹீரோ ஆஃப் பாயில் சாப்பிடும் போது, அதனை தெரியாமல் வில்லன் தட்டிவிட, சென்னை போலீஸ் தேடும் மிகப்பெரிய குற்றவாளி என்பது தெரியாமல், விஷ்ணு அவரை பொளந்து கட்டி ஜெயிலுக்குள் போடுகிறார். அதன்பிறகு, ஹீரோவை கொல்வதே தனது முதல் அசைன்மென்ட் என வில்லன் சபதமெடுக்க, அவருக்கு பயந்து பல்வேறு கெட்டப்புகளை போட்டு ஊர் முழுக்க உலவும் விஷ்ணு, வில்லனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே மீதிக் கதை.
படம், தொடக்கத்தில் 'என்னடா இது' என்று இருந்தாலும், போகப் போக காமெடியை ஆங்காங்கே தூவி பயணிக்கிறது. யோகிபாபு, கருணாகரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், 'லொள்ளு சபா' மனோகர் என்று படம் முழுக்க பல காமெடியன்கள் நிரம்பியுள்ளனர். சில இடங்களில் காமெடி போர் அடித்தாலும், பல இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறது. குறிப்பாக, 'டாய்லட் காமெடி' அல்டிமேட்.
ஹீரோயின் ரெஜினா. அழகாக வந்து 'அழகை' காட்டுகிறார். நாயகனை காதலிக்கிறார். வேறு வேலை பெரிதாக ஒன்றுமில்லை. ஹீரோ விஷ்ணுவுக்கே பெரிதாக படத்தில் வேலை இல்லை. கலர் கலராக பல்வேறு கெட்டப்புகளை போடுவதைத் தாண்டி, படம் முழுக்க சைக்கிள் ஓட்டுகிறார், அவ்வளவுதான். (வில்லன் பெயர் 'சைக்கிள் ஷங்கர்' என்பதால், படம் முழுக்க சைக்கிள் ஓட்டினாரோ என்னவோ!)
ஆனால் ஒன்று... சினிமாவில் எப்படியாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஹீரோ என்ற அந்தஸ்தை விட்டு ஒருபடி கீழிறங்கி இப்படத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு. எப்படியாவது தான் நடிக்கும் படம் ஹிட்டானால் போதும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், லாஜிக் பற்றி துளியும் யோசிக்காமல், 2 மணி நேரம் எல்லாவற்றையும் மறந்து சிரித்துவிட்டு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் எனில், தாராளமாக குடும்பத்துடன் சென்று சிலுக்குவார்பட்டி சிங்கத்தை ரசிக்கலாம்.