விஷாலுக்கு எதிராக இருப்பவர்களை ஒன்றுசேர்த்து, மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளார் சிம்பு. இதில் சீமான், சேரன், அமீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக சரத்குமார் அணியில் இணைந்து துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் சிம்பு. அதற்கு முன்பிருந்தே விஷாலுக்கும், சிம்புவுக்கும் இருந்த உரசல், மிகப்பெரிய மோதலாக மாறியது அப்போதுதான். அந்த மோதல் இன்னும் முடிந்தபாடில்லை.
காலம் காலமாக போட்டியாக சொல்லப்படும் தனுஷுடன் கூட ‘சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் இணைந்துவிட்டார் சிம்பு. ஆனால், விஷாலுடன் மட்டும் ஏதோ தீராத பகை இருக்கிறது போல... போதாக்குறைக்கு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ விஷயத்தில் விஷால் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்டு போட... ‘கன்னித்தீவு’ போல இப்போதைக்கு இந்தப் பிரச்னை முடியாது போலிருக்கிறது.
இன்னொரு பக்கம், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக விஷால் சொன்னதும், ‘தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷால் தேர்தலில் நிற்கட்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார் இயக்குநரும், தயாரிப்பாளருமான சேரன். இரண்டு நாட்களாகத் தொடர்ந்த இந்த போராட்டம், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ‘எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்’ என்ற பழமொழிக்கேற்ப, சிம்பு - சேரன் இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். கூடவே, சேரன் அணியில் இருக்கும் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அமீர் ஆகியோரும் சிம்புவைச் சந்தித்துள்ளனர். ஆக, இந்தக் கூட்டணி விஷாலுக்கு எதிராக எதையோ செய்ய திட்டம் தீட்டி வருகிறது என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.