சமூக தளங்களான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. இந்த நிலையில், அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென நேற்று அறிவித்தார்.
இது குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில், "எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள். சுதந்திர தின வாழ்த்துகள்" என சிம்பு குறிப்பிட்டிருந்தார்.
சிம்புவின் இந்த திடீர் நடவடிக்கையால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பலரும் அவரைத் தொடர்பு கொண்டு, மீண்டும் சோஷியா மீடியாவிற்கு வர வேண்டும் என வேண்டி விரும்பி வற்புறுத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "யாரும் இந்த முடிவை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமூக தளங்களில் எதிர்மறையான சூழ்நிலை தான் உள்ளது. பணம் வாங்கிக் கொண்டு சில பேரை அவமானப்படுத்துவது என்று பல சம்பவங்கள் இதில் நடைபெறுகிறது. சோஷியல் மீடியாக்கள் மூலமாக எனது ரசிகர்களிடம் உரையாடுவதை மட்டும், நான் இதனால் இழக்கிறேன். மற்றபடி எனக்கு கவலையில்லை. எனது கோபத்தை கட்டுப்படுத்த தவறிவிடுவேனோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. அப்படிப்பட்ட விஷயம் எனக்கு தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.