சிம்பு முதன்முதலாக இசையமைத்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், வைபவி ஷாண்டில்யா ஹீரோயினாக நடித்துள்ளார். ‘சர்வர் சுந்தரம்’ படத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ளர். ‘லொள்ளு சபா’ புகழ் சேதுராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.
‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, இன்று மதியம் நடைபெற்றது. படத்தில் காமெடியனாக நடித்துள்ள விவேக் கலந்துகொண்டு பேசினார். “எல்லோருக்கும் இளையராஜா இசை பிடிக்கும். ஆனால், தற்போது இசை பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. இளையராஜா இசையை ரசித்தவர்கள் இதையும் ரசிக்கிறோம்.
ஒருநாள் இரவு 12 மணி இருக்கும். சிம்புவிடம் இருந்து போன். ‘உங்களுக்கு மெயிலில் ஒரு பாடலை அனுப்பியிருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்’ என்றார். நானும் கேட்டுவிட்டு, ‘நல்ல பெப்பியாக இருக்கிறது’ என்று சொன்னேன். என் மகள் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, ‘ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லுங்கப்பா’ என்றார். இன்றைய தலைமுறைக்கு சிம்புவின் இசை பிடித்துவிட்டது.
சிம்புவின் வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பல திறமைகளைக் கொண்டவர் சிம்பு. அவருக்குள் ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன. அதனால், தன்னுடைய ரசிகர்களை ஒருபோதும் சிம்பு இழந்துவிடக்கூடாது. அவர்களை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதைச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது” என்று பேசினார் விவேக்.